வேலையைவிட்டு போ என்று கூறியதால் ஆத்திரம்; கடை உரிமையாளர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய டீ மாஸ்டர்: தேனாம்பேட்டை பகுதியில் பரபரப்பு

சென்னை: வேலையை விட்டு போ என்று கூறியதால் ஆத்திரமடைந்த டீ மாஸ்டர் ஒருவர் கடையின் உரிமையாளர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் தேனாம்பேட்டையில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்தவர் அருண்(44). இவர் தேனாம்பேட்டையில் டீ கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் டீ மாஸ்டராக பெரிய பாண்டி(28) என்பவர் வேலை செய்து வருகிறார்.

கடையின் உரிமையாளர் அருண் நேற்று மாலை திடீரென டீ மாஸ்டர் பெரிய பாண்டியை இன்றுடன் வேலையைவிட்டு விட்டு போ என்று கூறியுள்ளார். அதற்கு டீ மாஸ்டர் என்ன என்று சொல்லாமல் திடீரென வேலையைவிட்டு போ என்று கூறினால் எப்படி போவது என்று கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த டீ மாஸ்டர் அடுப்பில் இருந்த கொதிக்கும் பாலை எடுத்து கடையின் உரிமையாளர் அருண் மீது ஊற்றி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயமடைந்த அருண் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். பிறகு அருகில் இருந்தவர்கள் உதவியுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அருண் 20 சதவீதம் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். பிறகு சம்பவம் குறித்து அருண் அளித்த புகாரின் படி தேனாம்பேட்டை போலீசார் டீ மாஸ்டர் பெரிய பாண்டி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள டீ மாஸ்டரை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் தேனாம்பேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: