தங்கு தடையின்றி தண்ணீர் வடிய வசதியாக வடகிழக்கு பருவ மழை முடியும் வரை நீர்வழித்தடங்களை தூர்வார வேண்டும்: பொறியாளர்களுக்கு நீர்வளத்துறை உத்தரவு

சென்னை: நீர்வழித்தடங்களில் மழைநீர் தங்கு தடையின்றி செல்ல வசதியாக, வடகிழக்கு பருவமழை முடியும் வரை தூர்வாரும் பணி மேற்கொள்ள வேண்டும், என பொறியாளர்களுக்கு நீர்வளத்துறை உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 2 வாரங்களில் தொடங்க உள்ளது. இதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் வடிகால்களை தூர்வாரும் பணி நடந்து வருகிறது. பல இடங்களில் பணி முடிந்துள்ளது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நீர்வழிக் கால்வாய்கள், மழைநீர் வடிகால்கள் வழியாக மழைநீர் தங்கு தடையின்றி செல்வதற்காக தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையின் முக்கிய நீர்வழித்தடங்களான கூவம் ஆறு, அடையாறு, பக்கிங்காம் கால்வாய், கொசஸ்தலையாற்று படுகைகள், ஓட்டேரி, விருகம்பாக்கம் கால்வாய் உள்ளிட்டவை நீர்வளத்துறை மூலம் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.  குறிப்பாக அடையாறு, பக்கிங்காம் கால்வாய், கூவம் கால்வாய்களில் தங்குதடையின்றி மழைநீர் செல்ல வசதியாக தூர்வாரும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. அடிக்கடி தூர்வாரினாலும், முக்கிய நீர் வழிகளில் தினசரி திடக்கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்படுவதால், வெள்ளம், உள்கட்டமைப்புகளுக்கு சேதம் ஏற்படுவதை தடுக்க, குறிப்பிட்ட கால இடைவெளியில் தூர்வார உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

வடகிழக்கு பருவமழை காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் இருக்க, வடிகால் வழியாக மழைநீர் வேகமாக வடிவதற்கு ஏதுவாக பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. வெள்ளம் ஏற்படாமல் இருக்கவும், தண்ணீர் தேங்குவதை தடுக்கவும், நீரோட்டத்தை சீராக வைத்துக் கொள்ளவும் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பணிகள் டிசம்பர் 31ம் தேதி வரை 3 மாதங்கள் தங்கு தடையின்றி நடைபெற வேண்டும். பணிகளில் அலட்சியம் காட்டாமல் பருவமழை காலத்தில் எடுக்க வேண்டிய பணிகளை எடுக்க வேண்டும். நீர்வழித்தடங்களில் மழைநீர் தங்குதடையின்றி செல்ல  வசதியாக வடகிழக்கு பருவமழை முடியும் வரை தூர்வார வேண்டும் என பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

* 95 சதவீதம் நிறைவு

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் வரும் 15ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சிங்கார சென்னை 2.0 முதல் பகுதி திட்டத்தில் 1,354 கிலோ மீட்டர் நீளத்துக்கான கால்வாய் சீரமைப்பு பணிகளில் 95 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. 1,030 கிலோ மீட்டர் தூரத்துக்கு அடைப்புகள் நீக்கப்பட்டு தூர்வாரி முடிக்கப்பட்டுள்ளது. 10ம் தேதிக்குள் இந்த பணிகள் முடிவடையும்.

* 1913 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்

வடகிழக்கு பருவ மழையின்போது சென்னையில் எங்காவது தண்ணீர் தேங்கினால் 1913 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். கடந்த ஆண்டை போல பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு பல்வேறு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. தண்ணீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்கள் தங்கவும், அவர்களுக்கு உணவு வழங்கவும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

* தயார் நிலை

கனமழை பெய்து அதிக அளவு தண்ணீர் தேங்கினால், அதை உடனுக்குடன் வெளியேற்ற 719 மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதில் 400 மோட்டார்கள் 100 குதிரை திறன் சக்தி கொண்டது. இந்த மோட்டார்கள் ஒவ்வொன்றும் நிமிடத்துக்கு 11,700 லிட்டர் தண்ணீரை வெளியேற்றும் திறன் கொண்டவை. கால்வாய்கள் இணைக்காத இடங்களில் ஏற்படும் தண்ணீர் தேக்கத்தை சமாளிக்க இந்த மோட்டார்கள் பயன்படுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தண்ணீர் தேங்க வாய்ப்புள்ள இடங்கள் ஒவ்வொரு மண்டலத்திலும் கண்டறியப்பட்டுள்ளது. 34 இடங்களில் வெள்ளம் சூழ்வது தவிர்க்க முடியாது என்று கூறி உள்ளார்கள். அந்த இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: