பூண்டி ஏரியில் ரூ.80 லட்சம் மதிப்பில் கரையோர மண் அரிப்பை தடுக்க கன சதுர கற்கள் பதிக்கும் பணி: நீர்வளத்துறை நடவடிக்கை

சென்னை: சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான பூண்டி ஏரி 34.85 சதுர கி.மீ. சதுர பரப்பளவு கொண்டது. இந்த நீர்த்தேக்கத்திற்கான கால்வாயில் மழைக் காலங்களில் பெய்யும் நீர், கிருஷ்ணா கால்வாய் நீர் ஆகியவை முக்கிய நீர் ஆதாரமாகும். தற்போது பூண்டி நீர்த்தேக்கத்தில் இந்த ஆண்டுக்கான நீர் ஆதாரம் இருப்பு உள்ளது. அத்துடன், மழை பெய்தால் கால்வாய் வரத்து நீரால் நீர் மட்டம் உயர்வதற்கான வாய்ப்பும் உள்ளது. இதுபோன்று நீர்மட்டம் உயரும் போதெல்லாம் கரையோரம் மண் அரிப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாததாகவே உள்ளது.  அதற்கு காரணம் மண் அரிப்பைத் தடுக்கும் வகையில் பதிக்கப்பட்டிருந்த சிமென்ட் சிலாப்கள் நீர் அலை வேகமாக மோதுவதால் சேதமடைந்தது. அதனால் மண் அரிப்பு ஏற்பட்டு கரையின் உள்பகுதியில் குடைந்து உடையும் நிலை உள்ளது.

இதை தடுக்க கனமான சிமென்ட் தடுப்புகள் பதித்து பாதுகாக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கை எழுந்தது. அதை ஏற்று கன சதுர கற்கள் பதிக்கும் பணி நீர்வளத் துறை மூலம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் மேற்கொள்ள ரூ. 80 லட்சம் நிதி ஒதுக்கி அனுமதி அளித்துள்ளது. தற்போது பூண்டி நீர்த்தேக்கத்தின் சாலை, சதுரங்கப்பேட்டை முன்புறம் ஆகிய பகுதிகளில் சிமென்ட் கன சதுர கற்கள் தயார் செய்யும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் முடிந்ததும் நீர்த்தேக்கத்தின் இடது, வலது கரையில் தலா 150 மீட்டரும், மதகுகள் வெளியேற்றம் கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் 70 மீட்டரும் என மொத்தம் 370 மீட்டர் தூரத்திற்கு கன சதுர கற்கள் பதிக்கும் பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த கற்களை பதிப்பதன் மூலம், கரையோர சேதம் தவிர்க்கப்படும் என தெரிய வருகிறது.

Related Stories: