பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் வடகிழக்கு பருவ மழை பாதுகாப்பு முன்னேற்பாடு குறித்து ஆலோசனை: அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்பு

பெரம்பூர்: பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகளுடன் கலந்துபேசி ஆய்வுக் கூட்டங்களை நடத்தும்படி தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் வடகிழக்கு பருவமழை குறித்த ஆய்வு கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 7 வார்டுகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் பெரம்பூர் எம்எல்ஏ ஆர்டி.சேகர் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதில், கொடுங்கையூர் கால்வாய், ஜவகர் கால்வாய், கேப்டன் கால்வாய், வியாசர்பாடி கால்வாய் உள்ளிட்ட கால்வாய்கள் தூர்வாரபட்டு வருவது குறித்தும், அந்த பகுதிகளில் மழைநீர் தேங்கினால் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், மழைக்காலத்தில் அதிகமாக தண்ணீர் தேங்கும் வியாசர்பாடி மேம்பாலம், கணேசபுரம் மேம்பாலம் போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும், மருத்துவ முகாம்கள் நடத்துவது, மாநகராட்சி கூடங்களை தயார் நிலையில் வைத்திருப்பது, மரக்கிளைகளை அகற்றுவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது.

மேலும், தாழ்வான பகுதிகளில் உள்ள மின்சார பெட்டிகள், மின் வயர்கள் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்கள் குறித்து மின்வாரியத் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு குறிப்பிட்ட சில இடங்களில் உடனடியாக பணிகளை தொடங்கவும் அறிவுறுத்தப்பட்டது. மழைக்காலங்களில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டால் அதனை பம்பிங் ஸ்டேஷன்கள் மூலம் அகற்றுவது குறித்து கழிவுநீர் அதிகாரிகளுடன் ஆலோக்கபட்டது.

பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள அனைத்து துறை அதிகாரிகள் அனைவரையும் ஒன்றிணைத்து வாட்ஸ்அப் குழு அமைத்து மழைவெள்ள பாதிப்புகள் குறித்து, அந்தக் குழுவில் தெரிவிப்பதன் மூலம் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும். குறிப்பிட்ட ஏரியாவில் உள்ள பொதுமக்கள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் அந்த குழுவில் இடம் பெறுவார்கள் எனவும். இதன்மூலம் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள மழைவெள்ள பாதிப்புகளை உடனடியாக தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பெரம்பூர் எம்எல்ஏ ஆர்டி.சேகர் தெரிவித்தார்.

Related Stories: