அமெரிக்காவில் கடத்தப்பட்ட 8 மாத குழந்தை உட்பட 4 இந்தியர்கள் கொலை

லாஸ் ஏஞ்செல்ஸ்: அமெரிக்காவில் கத்தி முனையில் கடத்தப்பட்ட இந்திய வம்சவாளியை சேர்ந்த 8 மாத குழந்தை உட்பட 4 சீக்கியர்களும் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மெர்சிட் கவுண்டியை சேர்ந்தவர் ஜஸ்தீப் சிங், ஜஸ்லீன் கவுர் தம்பதியினர். இவர்களுக்கு  அரூஹி தேரி என்ற 8 மாத குழந்தை உள்ளது. இவர்களது உறவினர் அமன்தீப் சிங். இவர்கள் பஞ்சாப் மாநிலத்தின் ஹோசியார்பூரில் உள்ள ஹர்சி பின்டி பகுதியை (சீக்கியர் குடும்பத்தினர்) பூர்வீகமாக கொண்டவர்கள். இந்நிலையில், கடந்த திங்களன்று புதிதாக டிரக் வியாபாரத்தை தொடங்கி உள்ளனர். அங்கிருந்து 4 பேரும் கத்திமுனையில் கடத்தப்பட்டனர். அன்று மாலை அவர்களது கார் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது.

 இதுதொடர்பாக, மெர்சிட் கவுண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினார்கள். இந்நிலையில், ஆர்சார்ட் பகுதியில் சடலங்கள் கிடப்பதாக போலீசாருக்கு அந்த பகுதியை சேர்ந்த பண்ணை தொழிலாளர் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் சென்றுபார்த்தபோது, கடத்தப்பட்ட சீக்கிய குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் சடலமாக கிடந்தனர். இந்நிலையில், 4 பேரை கடத்தி செல்வது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. அதன் அடிப்படையில் 47 வயதான இயேசு மனுவால் சல்காடோ என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் தற்கொலைக்கு முயன்றதால் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.

* பஞ்சாப் முதல்வர் கடும் கண்டனம்

கலிபோர்னியாவில் சீக்கிய குடும்பம் கடத்தி கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான்  கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, முதல்வர் பக்வந்த் தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘கலிபோர்னியாவில்  8 மாத பெண் குழந்தை உட்பட 4 இந்தியர்கள் கொல்லப்பட்டது குறித்து அறிந்து வேதனை அடைந்தேன். இது போன்ற கொடூர கொலை சம்பவமானது அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் உள்ள பஞ்சாப் மக்களின் பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது. வெளியுறவு துறை அமைச்சர் இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: