வரும் 16ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது: 35 - 75 சதவீதம் கூடுதலாக மழை பெய்ய வாய்ப்பு; முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்; தயார் நிலையில் தமிழக அரசு

சென்னை: தென் மேற்கு பருவமழை அக்டோபர் 15ம் தேதியுடன் விடைபெற உள்ளதால்,  தமிழகத்துக்கான வட கிழக்கு பருவமழை அக்டோபர் 16ம் தேதி முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு 35 முதல் 75 சதவீதம் கூடுதலாக மழை பெய்யும் வாய்ப்புள்ளதால், அதை சமாளிக்க வேண்டிய அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து தயார் நிலையில் உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 20ம் தேதி தொடங்கி 4 மாதங்கள் பெய்வது வழக்கம். இந்த பருவமழை காலத்தில் தான், தமிழகத்துக்கு வேண்டிய மழை நீர் கிடைக்கும்.

இந்த பருவத்தில் கிடைக்கும் மழை நீர் மூலம் தான் தமிழகத்தில் விவசாயம், குடிநீர் தேவை உள்ளிட்டவை பூர்த்தியாகும். அதே நேரத்தில் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை பெய்யும் தென் மேற்கு பருவமழை காலத்திலும் தமிழகத்தில் மழை பெய்யும். கடந்த காலங்களில் இந்த தென் மேற்கு பருவமழை காலத்தில் இயல்பாக பெய்ய வேண்டிய அளவான 118.6 மிமீட்டருக்கு பதிலாக, கூடுதலாக மழை பெய்ததுண்டு. ஆனால் 2022ம் ஆண்டில், செப்டம்பர் மாதத்தில் தமிழகத்தில் இயல்பாக பெய்ய வேண்டிய 118.6 மிமீக்கு பதிலாக, 85.6 மிமீ(-28) மழை பெய்துள்ளது. தென் மேற்கு பருவமழையை பொருத்தவரையில், செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவது வழக்கம். ஆனால் சில ஆண்டுகளில் அது அக்டோபர் இரண்டாவது வாரம் வரை நீடிப்பதுண்டு. இந்த ஆண்டு ஜூன் 1ம் தேதி தொடங்கிய தென் மேற்கு பருவமழை செப்டம்பர் இறுதியில் படிப்படியாக குறையத் தொடங்கியது.

குறிப்பாக குஜராத், சண்டிகர், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் அக்டோபர் 6ம் தேதி வரை பெய்தது. மும்பை, போபால், பாட்னா, லக்னோ ஆகிய பகுதிகளில் அக்டோபர் 5ம் தேதி வரையும் நீடித்த தென்மேற்கு பருவமழை கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா பகுதிகளில் அக்டோபர் 15ம் தேதி வரை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதையடுத்து, தென் மேற்கு பருவமழை அக்டோபர் 15ம் தேதியுடன் விடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தென் மேற்கு பருவமழையின் இறுதி காலமான செப்டம்பர் 29ம் தேதியில் இருந்து அக்டோபர் 15ம் தேதி வரையிலான காலத்தில், ஒடிசா, ஜார்கண்ட் மாநிலங்களில் இயல்பைவிட கூடுதலாக 60 சதவீதம் மழை பெய்துள்ளது.

அதேபோல, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, பீகார் சத்தீஷ்கர், ராயலசீமா, வட கர்நாடகா, ஆகிய பகுதிகளில் இயல்பைவிட 20 சதவீதம் முதல் 59 சதவீதம் வரை கூடுதலாக மழை பெய்துள்ளது. அந்தமான் நிகோபார், அசாம், மேகாலயா, சிக்கிம், கிழக்கு மத்திய பிரதேசம், தெலங்கானா, தெற்கு கர்நாடகா பகுதிகளில் இயல்பைவிட கூடுதலாக 19 சதவீதம் மழை பெய்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் பெய்த மழையை ஒப்பிட்டுப் பார்த்தால், 2022ம் ஆண்டில் இயல்பாக பெய்ய வேண்டிய 868.6 மிமீ மழைக்கு பதிலாக 925.0 மிமீ மழை பெய்துள்ளது. இது கூடுதலாக 6 சதவீதமாகும்.

இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின்படி, அக்டோபர் 15ம் தேதி வரை தென் பகுதியான கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா மாநிலங்கள் வரை வீசும் தென் மேற்கு பருவக் காற்று வீசுவது நின்றுவிடும் என்பதால்,  தென்மேற்கு பருவமழை பெய்வது அத்துடன் முடிவுக்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு அடுத்து தமிழகத்தில் வட கிழக்கு பருவக் காற்று வீசத் தொடங்கும். அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக அக்டோபர் 20ம் தேதி தான் வடகிழக்கு பருவமழை தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு அக்டோபர் 16ம் தேதி முதல் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பருவமழையில் இயல்பைவிட  35 முதல் 75 சதவீதம் கூடுதலாக பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக தமிழக அரசு பருவமழை சேதங்களை சமாளிக்கவும், பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கவும் வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக மழை நீர் தேங்கும் பகுதிகளில் உள்ள அடைப்புகளை அகற்றுவது, மழை நீர் வெளியேற வேண்டிய வகையில் புதிய கால்வாய்களை கட்டுவது, பழைய கால்வாய்களை சீரமைப்பது போன்ற பணிகளை தீவிரமாக செய்து வருகிறது. மேலும், மழை நீர் தேங்கும் தாழ்வான பகுதிகளில் அதிக பாதிப்பு ஏற்படாத வகையில் வேண்டிய ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. பள்ளிகளில் மழை நீர் தேங்காமல் இருக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இந்த பணிகள் 90 சதவீதம் அளவில் தமிழகம் முழுவதும் முடிந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. அதனால் இந்த வட கிழக்கு பருவமழையில் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது.

இதுகுறித்து சென்னையில் வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டிற்கு வடகிழக்கு பருவமழை காலத்தில் இயல்பாக 448 மி.மீ. மழை கிடைக்கும். இந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் புயல், காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாவதோடு, கனமழை முதல் அதி கனமழையும் இருக்கும். அப்போது, ஏற்படும் பேரிடர்களை திறம்பட எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்தாண்டு போல் இந்த ஆண்டு பெரிய சேதங்கள் ஏற்படும் வாய்ப்பு இருக்காது. மாவட்ட நிர்வாகம், பேரிடர் மீட்பு குழுவினர் தயாராக உள்ளனர். இந்திய வானிலை ஆய்வு மையத்துடன் 3 மணி நேரத்துக்கு ஒருமுறை ரிப்போர்ட் வாங்குகிறோம். தனியார் வானிலை மையத்துடனும் தொடர்பில் இருக்கிறோம்.

இன்னும் மழை பெய்ய ஆரம்பிக்கவில்லை. கடந்த ஆண்டு தண்ணீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் முதல்வர் நேரடியாக ஆய்வு செய்தார். தற்போது மழைநீர் வடிகால்வாய் பணிகளை முதல்வர் நேரடியாக சென்று பார்த்து வேகப்படுத்தியுள்ளார். வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பை விட கூடுதலாக பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி, 35 முதல் 75 சதவீதம் வரை இந்த ஆண்டு கூடுதலாக வடகிழக்கு பருவமழை பெய்யும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. மழை பாதிப்பை கண்காணிக்க எல்லா மாவட்டத்திலும் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

* புகார்கள் தெரிவிக்க தொலைபேசி எண்

1070 என்ற கட்டணமில்லா தொலைபேசி சேவையை பொதுமக்கள் பயன்படுத்தலாம். அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியுடன் மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் செயல்படும். 94458 69848 வாட்ஸ் அப் எண் மூலமும் பொதுமக்கள் தங்களது புகார்களை பதிவு செய்யலாம் என்று அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் தெரிவித்தார்.

* 15ம் தேதிக்குள் பணிகளை முடிக்க அமைச்சர் உத்தரவு

சென்னையை பொறுத்தமட்டில், தற்போது நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் பணிகளை வருகிற 15ம் தேதிக்குள் விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாநிலத்தில் மீட்பு பணிகளுக்காக 90 ஹெலிகாப்டர் இறங்குதளங்கள் தயார் நிலையில் உள்ளன. பேரிடர் காலங்களில் கடலோர மாவட்டங்களில் பாதிப்பிற்குள்ளாகும் மக்களுக்காக 1 லட்சத்து 13 ஆயிரம் பேர்களை தங்க வைக்கக்கூடிய 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. இதுமட்டுமின்றி, மற்ற மாவட்டங்களில் 4,973 பள்ளிகள், சமுதாய கூடங்கள் மற்றும் கல்யாண மண்டபங்கள் நிவாரண முகாம்களாக செயல்பட கண்டறியப்பட்டுள்ளன. மீட்பு நடவடிக்கைகளுக்காக, 2,897 ஜேசிபி இயந்திரங்களும், 2,115 ஜெனரேட்டர்களும், 483 நீர் இறைப்பான்களும், 3,915 மரம் அறுக்கும் இயந்திரங்களும், 5,900 கட்டுமரங்களும், 48,100 மோட்டார் படகுகளும் மற்றும் 5,800 இயந்திர படகுகளும் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் கூறினார்.

Related Stories: