மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மண்ணில்லா சாகுபடி மற்றும் செங்குத்து தோட்டம்.!

சென்னை: மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டம் இவ்வாண்டு ரூ.27.50 கோடி நிதியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நகர்ப்புறங்களில் வீட்டிற்குத் தேவையான கீரை வகைகள், கொத்தமல்லி, புதினா, வெங்காயம், முள்ளங்கி போன்றவற்றை வளர்ப்பதை ஊக்குவிக்கும் பொருட்டு 40 ச.அடி பரப்பில் செங்குத்துத் தோட்டம் அமைக்க நடப்பாண்டில் முதற்கட்டமாக சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, சேலம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நகரங்களில் 250 அலகுகள் அமைப்பதற்கு அலகு ஒன்றுக்கு 50 சதவீதம் பின்னேற்பு மானியமாக ரூ.15,000/- வீதம் மொத்தம் ரூ.37.5 இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

செங்குத்துத் தோட்ட அலகானது புற ஊதாக் கதிர்வீச்சு பாதுகாப்புடன் கூடிய  MS பிரேம் கட்டமைப்பு,  80 பி.வி.சி தொட்டிகள், 160 GSM நைலான் பின்னப்பட்ட ஜியோ டெக்ஸ்டைல் பேப்ரிக், தேங்காய் நார்கழிவு, செம்மண், மண்புழுஉரம், பெரிலைட், இயற்கை உரம் கலந்த மண்ணற்ற ஊடகக் கலவை, சொட்டு நீர்பாசன அமைப்பு மற்றும் கீரைகள், கொத்தமல்லி, முள்ளங்கி, வெங்காயம், புதினா போன்றவற்றின் விதைகள் மற்றும் நடவுச் செடிகள் போன்ற கூறுகளை உள்ளடக்கியதாகும்.

மேலும், நீரியல் வளர்ப்பு எனப்படும் ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் மண்ணிற்குப் பதிலாக கனிம ஊட்டச்சத்து நிறைந்த நீர்ம வளர்ப்பு ஊடகக் கரைசலுடன் மெருகேறிய பளிங்கு உருள்மணிகள் (perlite) அல்லது கூழாங்கற்கள், தென்னை நார்க்கழிவு  போன்றவற்றைப் பயன்படுத்தி கீரை வகைகளை சாகுபடி செய்வதற்கு நடப்பாண்டில் முதற்கட்டமாக சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, சேலம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நகரங்களில் 250 அலகுகள் அமைப்பதற்கு அலகு ஒன்றுக்கு 50 சதவீதம் பின்னேற்பு மானியமாக ரூ.15,000/-வீதம் மொத்தம் ரூ.37.5 இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஹைட்ரோபோனிக்ஸ் அலகானது NFT சேனல் (NFT Channel),  துருப் பிடிக்காத எஃகினாலான தாங்கும் அமைப்பு, 40 வாட் நீர்மூழ்கி மோட்டார், பெர்லைட் கலவை, மூன்று மாதத்திற்கான ஊட்டச்சத்து, 80 வலை அமைப்பிலான தொட்டிகள், கார அமில நிறங்காட்டி மற்றும் விதைகள் போன்ற கூறுகளை உள்ளடக்கியதாகும். ஆர்வமுள்ள பொதுமக்கள் இவைகளை அமைத்து பின்னேற்பு மானியம் பெற www.tnhorticulture.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Related Stories: