'தங்கள் நாட்டின் ஆக்கிரமிப்பு பகுதிகளை ரஷ்யா இணைத்தது பயனற்றது': உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சாடல்

கீவ்: தங்கள் நாட்டின் ஆக்கிரமிப்பு பகுதிகளை ரஷ்யா இணைத்தது பயனற்றது என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி சாடியுள்ளார். நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யா போரை தொடங்கியது. 8 மாதங்களை எட்டியும் போர் முடிவில்லாமல் தொடரும் சூழ்நிலையில், தாங்கள் கைப்பற்றிய உக்ரைனின் 4 பிராந்தியங்களில் பொது வாக்கெடுப்பு நடத்தி அவற்றை தன்னுடன் ரஷ்யா இணைத்துக்கொண்டது.

சர்வதேச சட்டத்திற்கு எதிரான இந்த இணைப்பிற்கு இறுதி வடிவம் கொடுக்கும் சட்டத்தை ரஷ்ய அதிபர் புதின் நேற்று முன்தினம் கையெழுத்திட்டார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, தங்கள் நிலத்தை கைப்பற்ற முயற்சிக்கும் எந்த ஒரு முடிவும், ஒப்பந்தங்களும் ரஷ்யாவிற்கு பயன் கொடுக்காது என சாடியுள்ளார். பயங்கரவாத நாட்டின் மதிப்பற்ற முடிவுகள், அவை கையெழுத்திடப்பட்ட காகிதத்திற்கு மதிப்பு இல்லை என்றும் ஜெலன்ஸ்கி விமர்சனம் செய்துள்ளார்.

Related Stories: