கோவிந்தா..கோவிந்தா..!: ஆகம முறைப்படி வேத மந்திரங்கள் முழங்க கருட உருவம் பொறிக்கப்பட்ட கொடி இறக்கத்துடன் திருப்பதி பிரம்மோற்சவம் நிறைவு..!!

ஆந்திரா: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 9 நாட்களாக வெகுவிமர்சியாக நடைபெற்ற பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது. ஆகம முறைப்படி வேத மந்திரங்கள் முழங்க கருட உருவம் பொறிக்கப்பட்ட கொடி இறக்கத்துடன் பிரம்மோற்சவம் நிறைவடைந்தது. திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த மாதம் 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று இரவு முதல் வாகன புறப்பாடாக ஏழுமலையானின் பெரிய சேஷவாகன சேவை நடைபெற்றது. அதனை தொடர்ந்து தினமும் காலை, இரவு ஆகிய வேலைகளில் கோயில் மாட வீதிகளில் உற்சவர் மலையப்ப சுவாமி வெவ்வேறு வாகனங்களில் எழுந்துருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

கடந்த 9 நாட்களாக 18 விதமான வானங்களில் மலையப்பசாமி உலா வெகுவிமர்சியாக நடைபெற்றது. தங்க தேரோட்டம், பழமையான தேர்த் திருவிழா என பிரம்மோற்சவம் களை கட்டியது. இதில் தமிழகம், புதுச்சேரி உட்பட 8 மாநிலங்களை சேர்ந்த 1,906 நடன கலைஞர்கள், 91 குழுக்களாக மாட வீதிகளில் நடனக் கலை புரிந்து பக்தர்களை வெகுவாக கவர்ந்தனர். திருப்பதி திருமலையில் நடைபெற்ற பிரம்மோற்சவ நிகழ்ச்சியின்போது 5 லட்சத்து 68 ஆயிரத்து 735 பேர் தரிசனம் செய்தனர். 24 லட்சத்து 89 ஆயிரத்து 481 லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக திருமலை தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது. உண்டியலில் பக்தர்கள் ரூ.20 கோடியே 43 லட்சத்து 9,400 காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இரண்டு லட்சம் பக்தர்கள் ஏழுமலையானுக்கு தலைமுடி சமர்ப்பித்துள்ளனர்.

Related Stories: