மலேசிய நாட்டு பயணி மாரடைப்பால் மரணம்

சென்னை: சவுதி அரேபியாவில் இருந்து கோலாலம்பூருக்கு சென்ற விமானத்தில் இருந்த மலேசிய பயணிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனே விமானம் சென்னையில தரையிறக்கப்பட்டது. எனினும் பயணி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சவுதி அரேபியாவில் உள்ள மதீனா நகரில் இருந்து, 272 பயணிகளுடன் சவுதி ஏர்லைன்ஸ் விமானம் மலேசியா நாட்டிற்கு நேற்று சென்றுகொண்டிருந்தது. அந்த விமானம் சென்னை வான்வெளியை  கடந்து செல்லும்போது,  மலேசியாவை சேர்ந்த அட்நம் பின் மாமத் (55) என்ற பயணிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவருடைய மனைவி நபீஷம் பிந்த், விமான பணிப்பெண்கள் மூலம் விமானிக்கு தகவல் தெரிவித்தார்.

மேலும், துரிதமாக செயல்பட்ட விமானி, அனைத்து அனுமதிகளையும் பெற்று, விமானம் சென்னையில் தரையிறங்க அனுமதி வாங்கினார். இதையடுத்து சவுதி அரேபியா ஏர்லைன்ஸ் விமானம் சென்னையில் பகல் 12 மணியளவில், சர்வதேச விமானநிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது. உடனடியாக சென்னை விமான  நிலைய மருத்துவக் குழுவினர் விமானத்துக்குள் ஏறி, அந்த பயணியை பரிசோதித்தனர். ஆனால் அந்தப் பயணி மயங்கிய நிலையில் ஏற்கனவே  உயிரிழந்திருந்தார். இதை அடுத்து மாரடைப்பால் மலேசியா நாட்டு பயணி உயிரிழந்ததாக அறிவித்தனர். இதையடுத்து அவரது உடல் குரோம்பேட்டை அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விமான நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: