தமிழக அரசு நடவடிக்கையால் மியான்மரில் சிக்கிய 13 தமிழர்கள் மீட்பு: பொருளாதார உதவி வழங்குவது குறித்து முதல்வர் ஆலோசனை

சென்னை: வேலை வாய்ப்பு தேடி தாய்லாந்துக்கு 300 இந்தியர்களை மியான்மர் நாட்டுக்கு கடத்தி சென்றது ஒரு மாபியா கும்பல். இது குறித்து தகவலின் பேரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த முயற்சியால், ஒரு பெண் உட்பட தமிழகத்தை சேர்ந்த 13 பேர் மீட்கப்பட்டனர். அவர்கள் விமானத்தில் டில்லி வழியாக நேற்று அதிகாலை சென்னை திரும்பினர். இந்தியாவில் உள்ள சில தனியார் நிறுவனங்கள், தாய்லாந்து நாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறையில், நல்ல சம்பளத்தில், நிரந்தரமான வேலை கிடைக்கும் என்று ஆன்லைனில் விளம்பரம் செய்தது. அதை படித்த தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள், பலர் வேலை வாய்ப்பு நிறுவனம் கேட்ட பணத்தை கொடுத்து விட்டு, தாய்லாந்துக்கு வேலை, கைநிறைய சம்பளம் என்ற கனவுடன் பறந்தனர்.  

ஆனால், தாய்லாந்துக்கு பதிலாக இந்த இளைஞர்கள் சென்ற விமானம் மியான்மர் நாட்டில் வலுக்கட்டாயமாக தரையிறக்கப்பட்டது. இதை எதிர்பார்க்காத இளைஞர்கள் விமானத்தை விட்டு இறங்க மறுத்தனர். ஆனால், அவர்களை அடித்து துன்புறுத்தி மியான்மர் நாட்டின் ஒரு மூலைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே சட்டத்துக்கு புறம்பான வேலைகளை செய்யுமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர். ஐடி கவுரவமான வேலை என்று நம்பி வந்த இளைஞர்களை, மியான்மர் நாட்டில் கொத்தடிமைகளாக நடத்தினர். சட்டத்துக்கு புறம்பான, சமூக விரோத செயல்களில் ஈடுபடுத்தியதால், அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த வேலைகளை செய்ய முடியாது, எங்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புங்கள் என்று அந்த இளைஞர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அந்த கும்பல், இளைஞர்களை அடித்து உதைத்து சித்திரவதை செய்து, நாங்கள் சொல்கிற வேலையை செய்ய வேண்டும் என்று கொடுமைப்படுத்தினர். அப்போதுதான் தாங்கள் தந்திரமாக ஏமாற்றப்பட்டு, மாபியா கும்பலிடம் மாட்டிக் கொண்டதை உணர்ந்தனர். இதன் பிறகு தந்திரமாக தங்களுடைய செல்போன் மூலம் பெற்றோர்களுக்கும், மத்திய, மாநில அரசுகளுக்கும்  ரகசிய தகவல் கொடுத்தனர்.

இதை அடுத்து தமிழக அரசு, மாபியா கும்பலிடம், எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்று ஆய்வு செய்தது. அப்போது சுமார் 300 இந்தியர்கள் சிக்கியுள்ளனர். அதில், 50 பேர் தமிழர்கள் என்பது தெரியவந்தது. உடனே தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், மியான்மரில் சிக்கிய 50 தமிழ் இளைஞர்களையும்  மீட்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார். அதோடு பிரதமர் மோடிக்கு அவசர கடிதமும் எழுதினார். அதை போல் மற்ற மாநில அரசுகளும், மத்திய அரசுக்கு கோரிக்கைகள் விடுத்தன.

இதை அடுத்து மத்திய அரசு, மியான்மர் மற்றும்  நாட்டில் உள்ள இந்திய தூதரகங்களுக்கு தகவல் கொடுத்து, இந்திய இளைஞர்களை  மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது. அதன்படி முதற்கட்டமாக இந்திய இளைஞர்கள் சிலர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 13 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்த மீட்கப்பட்ட இந்தியர்கள் அனைவரும் மியான்மரில் இருந்து தாய்லாந்து நாட்டுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.பின்பு தாய்லாந்து நாட்டிலிருந்து விமானம் மூலம் நேற்று முன்தினம் பிற்பகல் டெல்லி விமானநிலையம் வந்து சேர்ந்தனர்.

அவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 13 இளைஞா்களும் நேற்று அதிகாலை 1.30 மணிக்கு இண்டிகோ ஏா்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னை வந்தனர். அவர்களை தமிழ்நாடு அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசுகையில், ‘‘இந்த 13 பேர் முதல்கட்டமாக மீட்க்கப்பட்டுள்ளனர். மீதி உள்ளவர்களும் மீட்கப்படுவார்கள். இவர்கள் ஏஜென்டுகள் மூலம் டூரிஸ்ட் விசாவில் சென்றுள்ளனர். அந்த ஏஜென்டுகள் யார் என்று கண்டுப்பிடித்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இவர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவி செய்வது பற்றி, முதல்வர் ஆலோசித்து நடவடிக்கை எடுப்பார்என்று கூறினார்.

* மீட்கப்பட்டவர்கள்

அப்துல்லா புதுக்கோட்டை, விக்னேஷ், தென்காசி, வெஸ்லி கோவை, குமார் கோவை, அகமது வேலூர், சச்சின் வேலூர் சிவசங்கர், உதகமண்டலம், சவுந்தர் பொள்ளாச்சி, செல்வி அரியலூர், பிரசாந்த் கன்னியாகுமரி, ,ஜெனிகாஸ் கன்னியாகுமரி, மணிக்குமார் கரூர், செபஸ்டின் திருச்சி. இவர்களில் அரியலூரை சேர்ந்த செல்வி பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: