வெடிக்கிறது சிறுத்தை கொல்லப்பட்ட விவகாரம் ‘தேனி எம்.பி ரவீந்திரநாத்தை கைது செய்யவேண்டும்’: 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலெக்டர் அலுவலகம் முன் மறியல்

தேனி: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கோம்பைக்காடு பகுதியில் ஓபிஎஸ் மகன் தேனி எம்.பி ரவீந்திரநாத்துக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இப்பகுதியில், கடந்த சில நாட்களுக்கு முன் சோலார் மின்வேலியில் ஒரு சிறுத்தை மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதுதொடர்பாக ேதாட்டத்தில் ஆட்டுக்கிடை வைத்திருந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் கைதானார். தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்கத்தினர், எம்.பி ரவீந்திரநாத் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இதையடுத்து ரவீந்திரநாத் எம்.பி.யின் தோட்ட மேலாளர்களான தங்கவேல், ராஜவேல் ஆகியோரை வனப்பாதுகாப்புச் சட்டம் 1972, பிரிவு 5ன் கீழ் வழக்குப்பதிந்து நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்நிலையில் சிறுத்தை கொலை செய்யப்பட்டதாக தகவல் பரவியது.

சிறுத்தை இறந்து கிடந்தது ஓபிஎஸ் மகனின் தோட்டம் என்பதால் ரவீந்திரநாத்தை காப்பாற்ற முயற்சி நடப்பதாக, கால்நடை வளர்ப்போர் சங்கத்தினர் தொடர்ந்து புகார் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று பிற்பகல் தேனி கலெக்டர் அலுவலகம் அருகே  கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது, எம்.பி ரவீந்திரநாத்தை வனத்துறையினர் காப்பாற்ற முயற்சிப்பதாகவும், அப்பாவி தொழிலாளி மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறவேண்டும்.

தோட்ட உரிமையாளர்களான எம்.பி ரவீந்திரநாத், காளீஸ்வரன், தியாகராஜன் ஆகியோர் மீது முறைப்படி வழக்குப்பதிந்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், சங்க நிர்வாகிகள் தேனி கலெக்டர் முரளீதரனிடம், அலெக்ஸ்பாண்டியனை விடுதலை செய்வதுடன், எம்.பி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர். தொடர்ந்து, தேனி எஸ்பி பிரவீன் உமேஷ் டோங்கரே மற்றும் வன அலுவலரையும் சந்தித்து மனு அளித்தனர்.

Related Stories: