கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் ரூ.120 கோடியில் வடிகால் பணி விறுவிறு: அதிகாரிகள் நேரில் ஆய்வு

பெரம்பூர்: சென்னையில் மழைக் காலம் தொடங்குவதற்கு முன்பு மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளன. பருவ மழைக்கு முன்பு முடிந்தவரை பணிகளை துரிதமாக முடிக்க அதிகாரிகளும் ஆயத்தமாகி வருகின்றனர். அந்தவகையில், கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 70 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.120 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன. கொளத்தூர் தொகுதியில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் மழைநீர் தேங்கும் இடங்கள் கண்காணிக்கப்பட்டு குறிப்பிட்ட பல இடங்களில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும்  கொளத்தூர் 200 அடி சாலையில் தேங்கும் மழைநீர் கொளத்தூர் ஏரியில் கலந்து தணிகாசலம் நகர் வழியாக செல்கிறது.

இதேபோன்று, வில்லிவாக்கம் பாபா நகர், சீனிவாசா நகர், பூம்புகார் நகர், வேலவன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீர் தனியாச்சலம் நகர் கெனால்  வழியாக வெளியேறுகிறது. இறுதியாக ஜவகர் நகர், பெரியார் நகர், லோகோ ஒர்க்ஸ், வெற்றி நகர், திருவிக நகர், ராம் நகர், ராமமூர்த்தி காலனி உள்ளிட்ட பகுதிகளில் வெளியேறும் மழைநீர் பல்லவன் சாலை வழியாக ஜவகர் கெனால் வழியாக வெளியேறுகிறது. இந்த மழைநீர் அனைத்தும் கொடுங்கையூர் வழியாக எண்ணூர் முக துவாரத்திற்கு சென்று கடலில் கலக்கிறது. இவ்வாறு கொளத்தூரில் உள்ள மொத்த மழைநீரும் மூன்று வகைகளில் வெளியேறுகிறது. கொளத்தூர் தொகுதியில் உள்ள 60 சாலைகளில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காதபடி 70 கிலோமீட்டர் தூரத்திற்கு மழைநீர் வடிகால் பணிகள் ரூ.120 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பேப்பர் மில்ஸ் ரோடு எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதி அந்த சாலையில் போக்குவரத்தை வேறு பக்கம் மாற்றி வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஏற்கனவே ராம் நகர் வழியாக ஜவகர் நகர் கெனாலில் தண்ணீர் செல்ல பணிகள் நடைபெற்றன. இதனால் போக்குவரத்து போலீசார் அதிக அளவில் அங்கு ஈடுபடுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு அந்த பணிகள் முடிவுற்றன. இதேபோல, தற்போது மிக முக்கிய பணியான பூம்புகார் நகர் சீனிவாசா நகர் பகுதியில் இருந்து வெளியேறும் மழைநீர் பேப்பர் மில்ஸ் சாலை வழியாக தணிகாசலம் கெனால் பகுதியை சென்றடையும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தன. இதில் குறிப்பிட்ட  பேப்பர் மில்ஸ் சாலையை கடக்கும் பணி மிகவும் சவாலான பணி இதற்காக சாலையை கட் செய்து 36 மணி நேரத்தில் 25 ஊழியர்களை வைத்து மிகவும் துரிதமாக இந்த பணிகள் நேற்று காலை முடிக்கப்பட்டன.

பணிகளை விரைவாக முடிக்க இரண்டு கிரைன். 2 பொக்லைன் உள்ளிட்ட அதிநவீன இயந்திரங்களைக் கொண்டு இந்த பணிகள் விரைவாக முடிக்கப்பட்டன.  இதற்காக அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் மாற்று வழியில் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டது. மேலும், பேருந்துகளும் இவ்வழியாக செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதன் மூலம் கொளத்தூர் தொகுதியில்  முக்கிய மழைநீர் வடிகால் பணி முடிவுற்றுள்ளதாகவும் இனி ஏனைய பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு விரைவில் கொளத்தூர் தொகுதியில் நடைபெறும் அனைத்து மழைநீர் வடிகால் பணிகளும் முடிவுறும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நேற்று காலை சவாலான இந்த பணியை பார்வையிட திருவிக நகர் மண்டல அதிகாரி முருகன், செயற்பொறியாளர் செந்தில்நாதன், உதவி செயற்பொறியாளர் பாபு மற்றும் குறிப்பிட்ட அந்த மழைநீர் வடிகால் திட்ட பணியின் மேலாளர் நெல்சன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Related Stories: