பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் திமுகவை சிறப்பாக வழிநடத்தும் முதல்வர்: தயாநிதி மாறன் எம்பி பேச்சு

தண்டையார்பேட்டை: சென்னை கிழக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் முப்பெரும் விழா, மூத்த முன்னோடிகளுக்கு பரிசு வழங்கும் விழா, திமுக இளைஞரணி பயிற்சி பாசறை கூட்டம் பாரிமுனை அரண்மனைக்காரன் தெருவில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மகேஷ் குமார் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக திமுக கொள்கைப்பரப்பு செயலாளர் திருச்சி சிவா, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் கலந்துகொண்டு சிறபுரையாற்றி, மூத்த முன்னோடிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கினர்.

அதைதொடர்ந்து, தயாநிதி மாறன் எம்.பி பேசுகையில், ‘‘தமிழ்நாட்டில் இதுவரை எந்த மாவட்டத்திலும் முப்பெரும் விழாவிற்கு கூட்டம் நடத்தவில்லை. ஆனால் இந்த மாவட்டம் தான் கூட்டம் நடத்துகிறது. பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் மொத்த உருவமாக‌ முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருகிறார். மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரியாக தமிழகம் விளங்குகிறது. பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் வழியில் இன்று திமுகவை சிறப்பாக வழிநடத்துகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்,’’ என்றார். திமுக கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா பேசுகையில், ‘‘திராவிட மாடல் ஆட்சி என்பது எல்லோருக்கும் எல்லாம் என்பதே ஆகும்.

ஒரு காலத்தில் மருத்துவம் படிக்க சமஸ்கிருதத்தில் 40 சதவீதம் மதிப்பெண் எடுக்க வேண்டும். 1920ம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்த உடன் இதை  ஒழித்தனர்.  தமிழக முதல்வர் உரிமைக்கு குரல் கொடுப்போம். உயிருக்கு தோள் கொடுப்போம் என்று கூறுகிறார். அவருக்கு பின்னால் தமிழக மக்கள் உள்ளனர். இந்த சிறப்பான ஆட்சி தொடரும்,’’ என்றார். நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி.ஜோசப் சாமுவேல், மாவட்ட துணை செயலாளர் தேவன், மண்டல குழு தலைவர் ஸ்ரீராமலு, பகுதி செயலாளர்கள் ராஜசேகர், முரளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: