பிறப்பிட சான்று தராததால் பாதிக்கப்பட்ட பெண் டாக்டரை கலந்தாய்வில் அனுமதிக்க வேண்டும்: மருத்துவ மாணவர் சேர்க்கை குழுவுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்தவரை மணமுடித்ததால், பிறப்பிடச் சான்றும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றும் தர மறுத்ததை எதிர்த்து வழக்கு தொடர்ந்த பெண் மருத்துவரை, மருத்துவ மேற்படிப்புக்கான கலந்தாய்வில் அனுமதிக்கும்படி மத்திய மருத்துவ சேர்க்கை குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்த மருத்துவர் ஹேமா, மருத்துவ மேற்படிப்புக்கு விண்ணப்பிப்பதற்காக பிறப்பிட சான்றும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றும் கோரி விண்ணப்பித்தார்.

ஆனால், தமிழகத்தில் உள்ள திருக்கோவிலூரைச் சேர்ந்தவரை மணந்து கொண்டதால், பிறப்பிட சான்றும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றும் வழங்க மறுத்து புதுச்சேரி தாசில்தாரர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து மருத்துவர் ஹேமா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், நாட்டில் 90 சதவீதத்தினருக்கு பிறந்தது ஓரிடமாகவும், பணியாற்றுவது வேறிடமாகவும் உள்ளது.  தனது கணவர் திருக்கோவிலூரைச் சேர்ந்தவராக இருந்தாலும், புதுச்சேரி தான் தனது பிறப்பிடம் எனவும் அது மாறாது.

எனவே, புதுச்சேரி தாசில்தாரர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தனக்கு பிறப்பிட சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும். புதுச்சேரியில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்புக்கான கலந்தாய்வில் தன்னை அனுமதிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, புதுச்சேரி மருத்துவ மாணவர் சேர்க்கைக்காகான மத்திய குழு மருத்துவ மேற்படிப்பில் மனுதாரருக்கு ஒரு இடத்தை ஒதுக்கி வைக்க வேண்டும். அவரை கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். இந்த வழக்கில் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, மனுதாரருக்கு மாணவர் சேர்க்கை வழங்குவது தொடர்பாக புதுச்சேரி மருத்துவ மாணவர் சேர்க்கைக்காகான மத்திய குழு எந்த இறுதி உத்தரவும் பிறப்பிக்க கூடாது என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

Related Stories: