கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் எறிபத்த நாயனார் யானையை துணித்த விழா கோலாகலம்: திரளான பக்தர்கள் தரிசனம்

கரூர்: கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் எறிபத்த நாயனார் யானையை துணித்த விழா இன்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கரூரில் புகழ் சோழர் ஆட்சி காலத்தில் சிவகாமி ஆண்டார் இருந்தார். இவர் தினமும் நந்தவனத்தில் இருந்து பூக்களை பறித்து பசுபதீஸ்வரர் கோயிலுக்கு எடுத்து வந்து சுவாமிக்கு பூஜை செய்வார். அப்படி ஒரு நாள் நந்தவனத்தில் இருந்து பூக்களை பறித்து கொண்டு கோயிலுக்கு சென்றபோது பட்டத்து யானை பூக்குடலை தட்டி விட்டது.

இதை பார்த்த எறிபத்த நாயனார் ஆத்திரமடைந்து அரிவாளை எடுத்து யானையின் தும்பிக்கையை வெட்டினார். மேலும் இதை தடுக்க வந்த பாகன் உட்பட 5 பேரை வெட்டி சாய்த்தார். இந்த தகவல் அறிந்ததும் ஆத்திரமடைந்து சிவகாமி ஆண்டார் சம்பவ இடத்துக்கு வந்தார். அப்போது எறிபத்த நாயனார் காரணம் இல்லாமல் எதையும் செய்திருக்க மாட்டார். இந்த சம்பவத்துக்கு நானும் ஒரு காரணம் என்று நினைத்து தனது தலையை வெட்ட முயன்றார். அப்போது இறைவன் அசரீரி ஒலித்தது. இதையடுத்து யானை மற்றும் 5 பேர் உயிர்த்தெழுந்தனர் என்பது வரலாறு.

இந்த நிகழ்வை நினைவுபடுத்தும் வகையில் கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் எறிபத்த நாயனார் யானை துணித்த விழா கோலாகலமாக நடைபெறும். அதன்படி இந்தாண்டு பசுபதீஸ்வரர் கோயிலில் எறிபத்த நாயனார் யானை துணித்த விழா இன்று கோலாகலமாக  நடைபெற்றது.  இதையொட்டி 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஊர்வலமாக பூக்குடலை எடுத்து வந்து சுவாமிக்கு பூஜை செய்து வழிபட்டனர்.

அப்போது பக்தர்கள் முன்னிலையில் யானை பூக்களை தட்டி விடுவது, யானை தும்பிக்கையை எறிபத்த நாயனார் வெட்டுவது, பின்னர் யானை, பாகன் உட்பட 5 பேர் உயிர் பெறுவது போன்ற காட்சி நிகழ்த்தப்பட்டது.  இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழாவையொட்டி கரூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: