கோபி அருகே கிராம சபை கூட்டத்தில் அதிகாரிகளுடன் மக்கள் வாக்குவாதம்-முற்றுகை

கோபி : காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ஊராட்சியில் உள்ள மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர் கலந்து கொள்ள வேண்டும். இந்நிலையில் நம்பியூர் யூனியனுக்கு உட்பட்ட கோசனம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் கும்மகாளிபாளையம் அரசு பள்ளியில் நடந்தது.

முன்னதாகவே, இதுகுறித்து ஊராட்சி தரப்பில் எவ்வித தகவலும் பொதுமக்களுக்கு தெரிவிக்காமல், தூய்மை பணியாளர்களை வைத்து அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் திருமூர்த்தி நடத்தினார். இதில் பார்வையாளர்களாக ஈரோடு மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் மணிவண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் பெருமாள் மற்றும் தோட்டக்கலை, வேளாண்மை துறை உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஆனால், கிராம மக்கள் கலந்து கொள்ளாத நிலையில் அவசர அவசரமாக கிராம சபை கூட்டம் நடந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த கோசனம் கிராம மக்கள், கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு முற்றுகையிட்டனர். இதைத்தொடர்ந்து கிராம சபை கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர். இதையடுத்து கிராமத்தில் உள்ள சிலரை ஆட்டோவில் வரவழைத்து பெயரளவிற்கு கிராம சபை கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டது.

கோசனம் ஊராட்சி பொதுமக்கள் கூறுகையில், ‘‘ஊராட்சி பகுதியில் பல ஆண்டுகளாக சீரான குடிநீர் வழங்குவதில்லை.

மேலும் சாக்கடை சுத்தம் செய்தல், தண்ணீர் தொட்டி சுத்தம் செய்தல் போன்ற பணிகளும் நடப்பதில்லை. ஊராட்சி வரவு, செலவு கணக்குகளை வெளிப்படையாக காண்பிப்பதில்லை. ஊராட்சி தலைவர் திருமூர்த்தி மற்றும் ஊராட்சி செயலாளர் அம்மாசையப்பன் இதுவரை எவ்வித பதிலும் கூறுவதில்லை. கடந்த கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் கேள்வி கேட்டதால் இம்முறை யாருக்கும் தகவல் தெரியாமல் கிராம சபை கூட்டத்தை ரகசியமாக கூட்டி முடித்துள்ளனர்’’ என குற்றம்சாட்டினர்.

இதேபோல ஒழலக்கோயில் ஊராட்சியில் அரசு் பள்ளியில் கிராம சபை கூட்டம் அதிமுக தலைவர் வசந்தி பெரியசாமி தலைமையில் நடந்தது. நம்பியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக அலுவலர் விமலா, மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாளர் காந்திமலர் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர். கிராம மக்கள் வராததால் தூய்மை பணியாளர்களை வைத்து கூட்டம் நடந்தது.

கிராம சபை கூட்டத்தில் வரவு-செலவு கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, கிராம வளர்ச்சி குறித்தும், கிராமத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும் என ஆண்டிற்கு 4 முறை கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது. நம்பியூர் யூனியனில் அதிமுகவை சேர்ந்தவர்கள் தலைவர்களாக உள்ள ஊராட்சிகளில் நடக்கும் கிராம சபை கூட்டங்கள் பெயரளவிற்கு மட்டுமே நடப்பதால், இதுகுறித்து ஊராட்சி தலைவர், ஊராட்சி செயலாளர் மீது மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரியுள்ளனர்.

Related Stories: