திருப்பத்தூரில் காந்திஜெயந்தியையொட்டி காந்தியின் உருவ சிலைக்கு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை

*கதர் ஆடை விற்பனை துவக்கி வைத்தார்

திருப்பத்தூர் : திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் காந்தியடிகளின் 154வது பிறந்தநாளையொட்டி தமிழ் கதர் கிராமத் தொழில் வாரியத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கதர் அங்காடியை மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா திறந்து வைத்து தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கதர் சிறப்பு முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் காந்தியடிகளின் 154வது பிறந்தநாளையொட்டி அவரது உருவ படத்திற்கு கலெக்டர் அமர் குஷ்வாஹா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், தமிழ் கதர் கிராமத் தொழில் வாரியத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கதர் அங்காடியை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கதர் சிறப்பு முதல் விற்பனையை நேற்று துவக்கி வைத்தார்.

காந்தியடிகள் எழுதிய சுயராஜ்யம் என்ற நூலில் இந்தியாவில் இந்திய மக்களை வாட்டிடும் வறுமையைப் போக்குவதற்கு சரியான மருந்து கை ராட்டினமே என்று கூறியுள்ளார். அதன்படி இந்தியாவிலுள்ள ஏழை எளிய மக்களுக்கு வாழ்வளிப்பது கதர் நூற்பும், நெசவும் ஆகும். அதுமட்டுமல்லாமல் கிராமப்புறங்களில் கிடைக்கும் மூலப் பொருட்களைக் கொண்டு எண்ணெய்யிலிருந்து சோப்பு தயாரித்தல் (சலவை சோப்பு மற்றும் குளியல் சோப்பு) ஊதுபத்தி, மெழுகுவத்தி, தயாரித்தல் தேன் சேகரித்தல் போன்ற தொழில்களை செய்தும், அதனைச் சார்ந்து உபதொழில்கள் செய்வோருக்கும் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் ஆதரவு அளித்துவருகிறது.

கதர் துணியின் உற்பத்தி மற்றும் கிராமப்புறங்களில் உற்பத்தி செய்யப்படுகின்ற கிராமப் பொருட்களின் பயன்பாட்டினையும் அதிகரித்து விற்பனை செய்வதன் மூலம் கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தர மேம்பாட்டிற்கு உதவி செய்து சிறந்த முறையில் செயலாற்றிவருகிறது. கதர், பட்டு உல்லன் மற்றும் பாலிஸ்டர் ரகங்களுக்கு மத்திய மாநில அரசுகள் இணைந்து கதர்-30%, பட்டு-30%, உல்லன்- 20%, பாலியஸ்டர்- 30% ஆகிய சிறப்பு தள்ளுபடி அறிவித்துள்ளன.

மேற்குறிப்பிட்ட கதர் ரகங்களுடன் கிராமப் பொருட்களான தேன் ஜவ்வாது, சோப்பு வகைகள், சாம்பிராணி வகைகள் வலி நிவாரணி தைலம், ஊதுவர்த்தி மெழுகுவர்த்தி மூலிகை பற்பொடி மற்றும் பனை பொருட்களான சுக்கு காபி பவுடர், பனை வெல்லம் மிட்டாய் சுத்தமான பனங்கல்கண்டு ஆகிய பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், நடப்பு ஆண்டு முதல் மரசெக்காலான உற்பத்தி செய்யப்பட்ட கடலை எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய், பாரம்பரிய அரசி வகைகள், சாமை, திணை, குதிரைவாலி, சீரகசம்பா, மாப்பிள்ளை சம்பா மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட தேன் வகைகள் போன்ற பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு 2022-ல் தீபாவளி சிறப்பு விற்பனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனவே கதர் மற்றும் கிராமப் பொருட்களை வாங்கி கிராமப்புறங்களில் வாழும் எண்ணற்ற ஏழை எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாண்டு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் விற்பனை குறியீடாக ₹130.20 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே அரசு அலுவலர்களுக்கு சுலப தவணையில் கதர் இரகங்கள் வழங்கப்பட்டு வருவதால் அரசு அலுவலர்கள், அரசு பணியாளர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறும் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒரு கதர் ஆடையாவது வாங்கி பயனடையுமாறு திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா, தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது வில்சன் ராசசேகர், மாவட்ட சமூக நல அலுவலர் ஸ்டெல்லா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெயக்குமார், உதவி இயக்குனர் கதர் சிவகுமார், வட்டாட்சியர் சிவப்பிரகாசம், உதவி ஆய்வாளர் கதர் உமா மகேஸ்வரி, போர்மேன் சிட்டிபாபு மற்றும் பலர் உள்ளனர்.

Related Stories: