ராஜஸ்தான் காங். எம்எல்ஏக்கள் புதிய முதல்வர் பெயரை கேட்டு கொந்தளித்தனர்: பைலட் மீது கெலாட் தாக்கு

ஜெய்ப்பூர்: ‘புதிய முதல்வர் பெயரை கேட்டு, கட்சி எம்எல்ஏக்கள் கொந்தளித்தனர். அத்தகைய அதிருப்தி எழுந்தது ஏன் என்பதை தெரிந்து கொள்வது அவசியம்’ என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சச்சின் பைலட்டை மறைமுகமாக தாக்கி பேசி உள்ளார். காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டை தலைவராக்க கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா முயற்சி மேற்கொண்டார்.  அதனால் ராஜஸ்தானின் புதிய முதல்வராக  சச்சின் பைலட் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். பைலட்டை முதல்வராக்க கூடாது என 90க்கும் அதிகமான எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் வழங்கினர்.

காங்கிரஸ் எம்எல்ஏக்கள், அசோக்கெலாட் முதல்வராக நீடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனால்  தலைவர் பதவிக்கான போட்டியில் இருந்து  கெலாட் விலக நேரிட்டது.  ஜெய்ப்பூரில் நேற்று  கெலாட்  பேட்டியளிக்கையில்  சச்சின் பைலட் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக தாக்கினார். அவர் கூறும்போது,‘‘ ஒரு முதல்வரை மாற்றும் போது 80 முதல் 90 சதவீத எம்எல்ஏக்கள்  அணி மாறி புதிய வேட்பாளருக்கு ஆதரவளிப்பர். ஆனால், ராஜஸ்தானில்  புதிய முதல்வராக ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார் என தெரிந்ததும் எம்எல்ஏக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. ஏன் அப்படிப்பட்ட ஒரு அதிருப்தி ஏற்பட்டது என்பதை அவசியம் அறிய வேண்டும். முதல்வரை நியமிப்பது தொடர்பான முடிவை கட்சி தலைமைதான் எடுக்கும். நான் என்னுடைய பணிகளை செய்து வருகிறேன்’’ என்றார்.

Related Stories: