மதுரவாயலில் பரிதாபம் மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவி பலி: நோய் தடுப்பு பணிகள் தீவிரம், வீடு வீடாக தகவல் சேகரிப்பு

பூந்தமல்லி: மதுரவாயல் பகுதியில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அரசு பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். பருவ நிலை மாற்றம் காரணமாக சென்னையில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி குழந்தைகள், முதியோர்களை அதிகம் பாதித்து வருகிறது. சாதாரண காய்ச்சல் என்றால் 3 நாட்களில்  சரியாகிவிடும். தற்போது பரவி வரும் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் 5  நாட்கள் முதல் 7 நாட்கள் வரை பாதிக்கப்படுகின்றனர். அவ்வாறு 7  நாட்களில் இந்த காய்ச்சல் குணமான போதிலும் அதன்பின்பு 3 முதல் 7 நாட்கள்  வரை உடல்வலி இருக்கிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3 நாட்கள் ஆகியும் கடுமையான  காய்ச்சல் குறையாதபட்சத்தில் ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அந்த  காய்ச்சல் டெங்கு காய்ச்சலா அல்லது ப்ளூ காய்ச்சலா என கண்டறிந்து அரசு  மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதன்காரணமாக எழும்பூர்  அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் காய்ச்சலுக்கு என தனி வார்டு  திறக்கப்பட்டுள்ளது. மேலும், மாநகராட்சி சார்பில் கொசு ஒழிப்பு பணி, வீடு வீடாக ஆய்வு செய்து கொசுப்புழு உற்பத்தியை தடுக்கும் பணி உள்ளிட்டவை வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னையில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாநகராட்சி, 11வது மண்டலம், 144வது வார்டு மதுரவாயல், வேல்நகர், 4வது தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி சுஜிதா. இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள். அதில் மூத்த மகள் பூஜா (13), விருகம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில தினங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அங்கு, நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பூஜா உயிரிழந்தார். மர்ம காய்ச்சலால் சிறுமி உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை தரப்பில் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வளசரவாக்கம் 11வது மண்டல சுகாதாரத்துறை அதிகாரிகள், மாணவியில் வீடு உள்ள பகுதி முழுவதும் குப்பைகளை அகற்றி, கழிவுநீர் அடைப்புகளை சரி செய்து, பிளீச்சிங் பவுடர் மற்றும் கிருமிநாசினி தெளித்து வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் வேறு யாருக்காவது காய்ச்சல் உள்ளதா, என வீடு வீடாக சோதனை செய்து வருகின்றனர். காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை உடனடியாக சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் அல்லது மாநகராட்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கவேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: