ரூ.14.70 கோடி ஹவாலா பணம் விவகாரம்; வருமான வரித்துறைக்கு போலீசார் கடிதம்

வேலூர்: பள்ளிகொண்டா அருகே ரூ.14.70 கோடி ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக வருமான வரித்துறையினர் விசாரணை நடத்த போலீசார் தரப்பில் கடிதம் வழங்கப்பட்டது. வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அருகே சின்னகோவிந்தம்பாடி பகுதியில், கடந்த 29ம் தேதி இரவு சாலையோரமாக காரில் இருந்து லாரிக்கு பண பண்டல்களை ஒரு கும்பல் மாற்றிக் கொண்டிருந்தது. அப்போது, அந்தவழியாக ரோந்து சென்ற பள்ளிகொண்டா போலீசார், அந்த கும்பலை பிடித்து விசாரித்தனர். அப்போது, அந்த பண்டல்களில் சென்னை பிராட்வேயில் இருந்து கேரளாவுக்கு ஹவாலா பணம் கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து கார், லாரி மற்றும் ரூ.14 கோடியே 70 லட்சத்து 85 ஆயிரத்து 400 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் சென்னை பிராட்வே  நிசார் அகமது(33), மதுரை அங்காடி மங்கலம் வாசிம்அக்ரம்(19), லாரி டிரைவர் மற்றும் கிளீனர் கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த நாசர்(42), சர்புதீன்(37) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் நீதிமன்ற உத்தரவின்படி நேற்று முன்தினம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக, வேலுார் வருமான வரித்துறை அலுவலகத்துக்கு, முறைப்படி கடிதம் அளித்துள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: