ஊரக சுகாதார துறையில் சாதனை தேசிய அளவில் தமிழகத்துக்கு 3-ம் இடம்; டெல்லி விழாவில் குடியரசு தலைவரிடம் விருது பெற்றார் அமைச்சர் பெரிய கருப்பன்

சென்னை: ஊரக சுகாதார திட்டத்தில், தமிழகம் தேசிய அளவில் 3ம் இடம் பெற்றுள்ளது. இதற்கான விருதை டெல்லியில் நடந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து அமைச்சர் பெரிய கருப்பன் பெற்று கொண்டார். ஜல்சக்தி அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை மூலம் ஊரக பகுதிகளில் உள்ள சுகாதாரத்தின் தரம் மற்றும் சுகாதார உட்கட்டமைப்பில் அடைந்த முன்னேற்றம் ஆகியவற்றை முக்கிய அளவீடுகளாக கொண்டு இந்தியாவிலுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தரவரிசைப்படுத்தப்படும். அதன் அடிப்படையில், 2021-22ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சுகாதாரத்திற்கான மதிப்பீட்டில், தேசிய அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில், தமிழகம் 3ம் இடத்தை பிடித்துள்ளது.

டெல்லியில் நடந்த விழாவில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இதற்கான விருதினை வழங்கினார். இந்த விருதை தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் முதன்மை செயலாளர் அமுதா ஆகியோர் பெற்று கொண்டனர்.    மேலும், ‘சுஜலாம் 1.0’ எனும் 100 நாள் நீர் மேலாண்மை இயக்கத்தில், வீட்டுத்தோட்டம், தனி நபர் உறிஞ்சுக்குழிகள் மற்றும் சமுதாய உறிஞ்சுக்குழிகள் போன்ற கழிவு நீர் மேலாண்மை பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

தமிழகத்தில், பல்வேறு திட்டங்களின் கீழ் அப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 1.03 லட்சம் தனி நபர்/சமுதாய உறிஞ்சுக்குழிகள் மற்றும் வீட்டுத்தோட்டம் அமைக்கப்பட்டது. தேசிய அளவில், ‘சுஜலாம் 1.0’ எனும் 100 நாள் நீர் மேலாண்மை இயக்கத்தில் தமிழகம் ‘ஐந்தாம்’ இடம் பெற்றுள்ளது. அதற்கான விருதையும் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், முதன்மைச் செயலாளர் பெ.அமுதா ஆகியோர் குடியரசு தலைவரிடம் இருந்து பெற்றனர். கூடுதலாக தமிழகத்தில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கு இவ்விழாவில் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Related Stories: