நவ.6-ம் தேதி பேரணி எதிரொலி பாதுகாப்பு வளையத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் ஒன்றிய உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து போலீஸ் நடவடிக்கை

சென்னை: தமிழகத்தில் நவம்பர் 6ம் தேதி ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் பேரணியின்போது அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்புள்ளதாக ஒன்றிய உளவுத்துறை எச்சரித்துள்ளதை தொடர்ந்து, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மூத்த தலைவர்களை போலீசார் தங்கள் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வந்துள்ளனர். பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பு, அதன் கிளை அமைப்புகளை ஒன்றிய அரசு தடை செய்துள்ளதால், எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்க தமிழக போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பேரணிக்கு அனுமதி வழங்க முடியாது என்று தமிழக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனு மீதான விசாரணையில், வரும் நவம்பர் 6ம் தேதி தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு பேரணி நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில், தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணியின்போது கலவரங்கள் நடைபெறலாம் என்று ஒன்றிய உளவுத்துறை தமிழக காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பேரணியை தலைமையேற்று நடத்தும் மூத்த நிர்வாகிகள் 4 பேரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் மற்றும் இந்து அமைப்பை சேர்ந்த சிலரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் ஒன்றிய உளவுத்துறை அளித்த எச்சரிக்கையை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் வீடுகள், அலுவலகங்களை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும். தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட நிர்வாகிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: