மின்பரிமாற்றங்களில் இருந்து அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.17,000 கோடிக்கு மின்சாரம்; தமிழக மின்வாரிய உயரதிகாரி தகவல்

சென்னை: மின் பரிமாற்றங்களில் இருந்து அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.17,000 கோடிக்கு மின்சாரம் வாங்க தமிழக மின்வாரியம் திட்டமிட்டுள்ளதாக அதன் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சமீபத்தில் அனுமதித்த கட்டண மனுவின்படி அடுத்த 5 ஆண்டுகளுக்கு (2022-23 முதல் 2026-27 வரை) மொத்த கொள்முதல் செலவில் ரூ.17,000 கோடிக்கு மின்வாரியம் மின் பரிமாற்றங்களில் இருந்து மின்சாரத்தை வாங்கும். நீண்ட கால ஆதாரங்களில் இருந்து போதுமான மின்சாரம் கிடைக்காதபோது குறுகிய கால சந்தை மற்றும் மின் பரிமாற்றங்களில் இருந்து மின்சாரத்தை வாங்குவதற்கு மின்வாரியம் முன்மொழிந்துள்ளது.

இந்திய அரசு குறுகிய கால சந்தையின் உடனடி வளர்ச்சியை 2021ம் ஆண்டு வெளியிட்ட தேசிய மின்சாரக் கொள்கை வரைவு ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளது. இத்தகைய நோக்கங்களை அடைய பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமானது நீண்ட கால ஒப்பந்தங்களை அறிமுகப்படுத்துவதற்கான தீர்மானம். மின் பரிமாற்றத்திலிருந்து மின்சாரம் வாங்குவதற்கான செலவு ஒரு யூனிட் ரூ.5 முதல் ரூ.12 வரை மாறுபடும். இது ஒரு யூனிட்டுக்கு ரூ.20 ஆக உயர்ந்துள்ளது. பிறகு ஒன்றிய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் இது ரூ.12 ஆகக் குறைக்கப்பட்டது.

எனவே அங்கீகரிக்கப்பட்ட கட்டண மனுவின்படி மின் பரிமாற்றங்களில் விகிதங்கள் குறையும் போக்கு இல்லை. 2022-23ம் ஆண்டில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வழங்கிய ஒப்புதலுக்கு இணங்க மின்வாரியம் மின் பரிமாற்றங்களில் இருந்து 7,208.70 மில்லியன் யூனிட்டுகளை வாங்க திட்டமிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து 2023-24ம் ஆண்டில் 6,535.17 மில்லியன் யூனிட்டுகளையும், 2024-25ம் ஆண்டில் 6,130.70 மில்லியன் யூனிட்டுகளையும், 2025-26ம் ஆண்டில் 4,810.76 மில்லியன் யூனிட்டுகளையும், 2026-27ம் ஆண்டில் 2,265.43 மில்லியன் யூனிட்டுகளையும் வாங்க திட்டமிட்டுள்ளது. 2021-22ம் ஆண்டில் மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் வருடாந்திர செயல்திறன் மதிப்பாய்வின்படி மின்வாரியம் ரூ.5,727.23 கோடி செலவில் 8,977.35 மில்லியன் யூனிட்டுகளை வாங்கியுள்ளது.

தமிழகத்தின் சராசரி மின்தேவை ஒரு நாளைக்கு 17,000 மெகாவாட்டாகவும் அதன் சொந்த உற்பத்தி திறன் 7,175 மெகாவாட்டாகவும் உள்ளது என்று சமீபத்தில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். அடுத்த 10 ஆண்டுகளில் மாநிலத்தின் மின் தேவை 65,000 மெகாவாட்டை எட்டும் என்றும் 20,000 மெகாவாட் மின் உற்பத்தி திறனை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். 32,000 திறன் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் உள்ளது. இது மதிப்பிடப்பட்ட தேவையில் 50% பூர்த்தி செய்யும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related Stories: