கேளம்பாக்கம் அருகே வாலிபர் மர்ம கொலை

திருப்போரூர்: கேளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து புறவழிச்சாலை செல்லும் சாலையில் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட நிலம் உள்ளது. இந்த நிலத்தைச் சுற்றிலும் கம்பி வேலி போடப்பட்டு நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் கட்டிடப்பணிகள் தொடங்காததால் புதர் வளர்ந்து காணப்படுகிறது. புறவழிச் சாலையை ஒட்டி இருப்பதால் பெரும்பாலான குடிமகன்கள் இந்த இடத்தை குடிப்பதற்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று பகல் 12 மணியளவில் சிலர் அப்பகுதிக்கு மது அருந்துவதற்கு சென்றதாக தெரிகிறது. அப்போது புதர் ஒன்றில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவாின் சடலம் தலை, முகம் ஆகிய இடங்களில் கத்தியால் வெட்டப்பட்டும், கருங்கல்லால் தாக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்தனர்.

இதையடுத்து கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து, கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். கொலை செய்யப்பட்ட வாலிபரின் மார்பில் சூர்யா என்றும், வலது கையில் பேட் பாய் என்றும் ஆங்கிலத்தில் பச்சை குத்தப்பட்டிருந்தது. சடலம் கிடந்த இடத்தில் மது அருந்தியதற்கான அடையாளங்கள் காணப்பட்டன. வாலிபரின் உடலில் சட்டை இல்லாமல் கருநீலநிற ஜீன்ஸ் பேண்ட் மட்டும் அணிந்திருந்தார். நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு இந்த கொலை நடந்திருப்பதும் தெரியவந்தது.

மேலும், கொலை செய்யப்பட்ட நபர் யார் எந்த ஊர் என்ற விபரம் தெரியவில்லை. இதைதொடர்ந்து, போலீசார் கொலை செய்யப்பட்டு கிடந்த வாலிபரின் சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கேளம்பாக்கம் பள்ளி வளாகத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்த வாலிபர் யார் என்பது குறித்து  போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கேளம்பாக்கம் அடுத்த படூர் கிராமம், ஸ்ரீராமுலு தெருவைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரின் மகன் லட்சுமிகாந்த் (20) என்பது முதற்கட்டமாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலீசார் லட்சுமிகாந்தின் 4 நண்பர்களைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: