தமிழகம் முழுவதும் வரும் 11ம் தேதி சமூக நல்லிணக்க மனித சங்கிலி

சென்னை: தமிழகம் முழுவதும் அக்டோபர் 11ம் தேதி சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொது செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,  இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், விசிக தலைவர்  திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம். காதர்மொய்தீன்,  மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி  தலைவர் வேல்முருகன் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:

காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி (இன்று) மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக கட்சிகளின் சார்பில் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இவ்வியக்கத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், பல்வேறு மக்கள் அமைப்புகளும் பேராதரவு நல்கியிருந்தன. இச்சூழ்நிலையில் பாப்புலர் ப்ரன்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்டதாலும், அக்டோபர் 2ம் தேதி நடத்தப்படவிருந்த ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாலும் சமூகத்தில் உருவாகியுள்ள பதற்றமான சட்டம்-ஒழுங்கு சூழலைக் காரணம் காட்டி நாம் நடத்தவிருந்த சமூக நல்லிணக்க மனித சங்கிலி நிகழ்வுக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. மனித சங்கிலி நிகழ்ச்சியைத் தள்ளி வைக்கும்படி கேட்டுக் கொண்டனர்.

அதன் அடிப்படையில் ஆதரவு நல்கிய அனைத்துக் கட்சிகள் மற்றும் மக்கள் இயக்கங்களின் தலைவர்களோடு தொலைபேசியின் ஊடாக கலந்து பேசியதன் அடிப்படையில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி அறப்போர் வரும் அக்டோபர் 11ம் தேதி மாலை 4 மணிக்கு தமிழகம் முழுவதும் நடைபெறும். மதத்தின் அடிப்படையில் பகைமையை ஏற்படுத்தி, அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கும் பிரிவினைவாதிகளை இங்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று மக்களிடையே தொடர்ந்து பரப்புரை மேற்கொள்ளவும், சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்கவுமான இந்த மனித சங்கிலி நிகழ்வில் அனைத்து சனநாயக சக்திகளும், பொதுமக்களும் பங்கேற்று அறப்போராட்டத்தை வெற்றிபெற  செய்ய வேண்டும்.

Related Stories: