ரூ.40 கோடி கடனை செலுத்தாத பிரபல ஓட்டலின் நிலம் ஜப்தி

அண்ணாநகர்: சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில், கோயம்பேடு பகுதியில் பிரபல தனியார் ஓட்டலுக்கு சொந்தமான 7.5 கிரவுண்ட் நிலம் உள்ளது. இந்த ஓட்டல் நிர்வாகம் கடந்த 2018ம் ஆண்டு தனியார் வங்கியில், மேற்கண்ட நிலத்தை அடமானம் வைத்து, ரூ.20 கோடி கடன்  வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால், 5 ஆண்டாகியும் கடனாக பெற்ற அசல் ரூ.20 கோடி மற்றும் அதற்கான வட்டிதொகை ரூ.20  கோடி என மொதத்தம் ரூ.40 கோடியை திருப்பி செலுத்தவில்லை, என கூறப்படுகிறது. இதுகுறித்து வங்கி நிர்வாகம் பல முறை நோட்டீஸ் அனுப்பியும், ஓட்டல் நிர்வாகம் முறையாக பதிலளிக்கவில்லை, என கூறப்படுகிறது.

இதனையடுத்து, வங்கி நிர்வாகம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த எழும்பூர் தலைமை குற்றவியல் நீதிபதி கோதண்டராஜ், அந்த  ஓட்டலுக்கு சொந்தமான  7.5 கிரவுண்ட் நிலத்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில், கடந்த சில நாட்களுக்கு முன், வழக்கறிஞர்கள் அங்கு வந்து அறிவிப்பு செய்துவிட்டு சென்றனர். இதன்பிறகும், சம்பந்தப்பட்ட ஓட்டல் நிர்வாகிகள் அசல் மற்றும் வட்டி தொகையை செலுத்தவில்லை. இதனால், கோயம்பேடு காவல் நிலைய ஆய்வாளர் சந்திரசேகர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன், தனியார் வங்கி மற்றும் எழும்பூர் நீதிமன்ற ஊழியர்கள் நேற்று அந்த இடத்துக்கு வந்து, அந்த இடத்தை ஜப்தி செய்து, சீல் வைத்தனர்.

Related Stories: