ராஜா அண்ணாமலைபுரம் வெளிநாடு வாழ் இந்தியர் வீட்டில் 7 சோழர் கால சிலைகள், 2 தஞ்சை ஓவியங்கள் மீட்பு

சென்னை: சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் வீட்டில் பழமையான சிலைகள் மற்றும் ஓவியங்கள் பதுக்கி வைத்திருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி முத்துராஜா, மோகன் தலைமையிலான தனிப்படையினர் நேற்று முன்தினம் இரவு வெளிநாடு வாழ் இந்தியர் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, சோழர் காலத்து கிருஷ்ணர் சிலை, பார்வதி சிலை, புத்தர் சிலை என 7 விலை மதிப்பற்ற வெண்கல சிலைகள் இருந்தது. மேலும், 15ம் நூற்றாண்டை சேர்ந்த 2 தஞ்சை ஓவியங்களும் இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக வீட்டின் உரிமையாளரான அமெரிக்காவில் வசித்து வரும் நபரை தொடர்பு கொண்டு சிலைகள் குறித்து ஆன்லைன் மூலம் விசாரணை நடத்தினர்.

அப்போது, வீட்டில் இருந்த சிலைகள் மற்றும் ஓவியங்கள் அனைத்தும் தனது பெற்றோர் வைத்திருந்தனர். சிலைகள் பற்றிய விவரங்கள் தனக்கு தெரியாது என்று கூறியுள்ளார். இருந்தாலும் சிலைக்கான ஆவணங்கள் விரைவில் அளிப்பதாக உறுதியளித்தாராம். அதன்படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஓவியங்கள், சிலைக்கான ஆவணங்கள் சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்கி உள்ளனர்.அதேநேரம், கைப்பற்றப்பட்ட சிலைகள் மற்றும் ஓவியங்கள் அரிய வகை என்பதால் அதற்கான ஆவணங்கள் வீட்டின் உரிமையாளரிடம் இருக்க வாய்ப்பு இல்லை. கைப்பற்றப்பட்ட சிலைகள் மற்றும் ஓவியங்கள் எந்த கோயிலில் இருந்து திருடப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: