ஆயுதபூஜை, வரத்து குறைவு, கனமழை முன்னிட்டு கோயம்பேட்டில் பூக்கள் விலை ‘கிடுகிடு’ உயர்வு: ஒரு கிலோ மல்லி ரூ.900, முல்லை ரூ.750க்கு விற்பனை

சென்னை: ஆயுதபூஜை, வரத்து குறைவு மற்றும் கனமழை முன்னிட்டு கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லி ரூ.900, முல்லை ரூ.750, ஜாதி ரூ.360 என விற்பனையானது. இதனால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டுக்கு, மதுரை, வேலூர், ஓசூர், சேலம்,  திண்டுக்கல், திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களில் இருந்து, தினமும்  லாரிகளில், மல்லி, சாமந்தி, முல்லை என பல வகையான பூக்கள் வருகின்றன. இந்நிலையில், ஆயுத பூஜை மற்றும் வரத்து குறைவு காரணமாக  பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

நேற்று ஒரு கிலோ மல்லி ரூ.600, முல்லை ரூ.450, ஜாதி மல்லி ரூ.300, கனகாம்பரம் ரூ.300, சாமந்தி ரூ.200, சாக்லெட் ரோஸ் ரூ.100, மஞ்சள் ரோஸ் ரூ.140, பன்னீர் ரோஸ்ரூ.80, அரளிபூ ரூ.200, ரெட் அரளி பூ ரூ.250, மருகு ரூ.100, சம்பங்கி ரூ.100, ஆரஞ்சு ரோஸ் ரூ.120 என விற்பனையானது. இந்நிலையில் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால்,  கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் வரத்து குறைந்துள்ளது. அதே நேரத்தில் ஆயுதபூஜை முன்னிட்டு பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. நேற்று காலை ஒரு கிலோ மல்லி ரூ.900, ஜாதி மல்லி** ரூ.360, முல்லை ரூ.750, கனகாம்புரம் ரூ.600, சாமந்தி ரூ.240, சம்பங்கி ரூ.140, சாக்லெட் ரோஸ் ரூ.140, மஞ்சள் ரோஸ் ரூ.160, ஆரஞ்சு ரோஸ்ரூ.160, பன்னீர் ரோஸ் ரூ.100, அரளி பூ ரூ.250, ரெட் அரளி ரூ.300 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.

இதுகுறித்து பூ வியாபாரி ஒருவர் கூறும்போது, ‘‘பூக்களின் வரத்து குறைவு மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் கனமழை  முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதே போல் ஆயுதபூஜை நெருங்கி வருவதால் பூக்களின் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த விலை உயர்வால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.’’ என்றார்.

Related Stories: