பி.ஆர்க் தரவரிசை பட்டியல் 5ம் தேதி வெளியீடு: 8ம்தேதி கலந்தாய்வு நடைபெறும்; அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

சென்னை: பி.ஆர்க். படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வருகின்ற 5ம் தேதி வெளியிடப்படும். 8ம்தேதி கலந்தாய்வு நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில், இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை தொடர்பான தகவல்களை தெரிந்துகொள்ள அமைக்கப்பட்டுள்ள சேவை மையத்தை உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி நேற்று பார்வையிட்டார்.

அதன்பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இன்ஜினியரிங் கலந்தாய்வு 2வது சுற்றில், 31 ஆயிரத்து 94 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில் 23 ஆயிரத்து 458 பேர் விருப்ப இடங்களை தேர்வு செய்ததில், 14 ஆயிரத்து 153 பேருக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் 5 ஆயிரத்து 16 பேர் கல்லூரிகளில் சேர்ந்து விட்டனர். 4 ஆயிரத்து 16 பேர் முதன்மை விருப்ப இடங்களுக்காக காத்திருக்கின்றனர். முதல் சுற்று கலந்தாய்வு நிறைவில், 10 ஆயிரத்து 351 இடங்களில் மாணவ-மாணவிகள் சேர்ந்து இருக்கின்றனர்.

அதேபோல், பி.ஆர்க். படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வரும் 5ம் தேதி வெளியிடப்பட இருக்கிறது. அதனைத்தொடர்ந்து வரும் 8ம் தேதி முதல் அவர்களுக்கான கலந்தாய்வும் தொடங்குகிறது. குறைவான மாணவ-மாணவிகளே விண்ணப்பித்திருப்பதால், ஒரு சுற்று கலந்தாய்விலேயே இடங்கள் நிரம்பும். நீட் தேர்வின் தாமதம் காரணமாகவே, கல்வியாண்டு தொடங்குவதில் தாமதம் ஆகிறது. கடந்த முறை நீட் தேர்வு முடிவுக்கு முன்னதாக இன்ஜினியரிங் கலந்தாய்வை நடத்தியதால், அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரியில் அதிக இடங்கள் காலியாகி இருந்தன. இந்த ஆண்டு மேற்கொண்ட நடவடிக்கையால் காலி இடங்கள் இருக்காது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை நன்றாகவே நடந்து வருகிறது. இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கான வகுப்புகளை பொறுத்தவரையில், 4 சுற்று கலந்தாய்வு முடிந்ததும், அக்டோபர் இறுதியில் தொடங்கும். முதலாம் ஆண்டில் சேரும் இன்ஜினியரிங் மாணவிகளில் அரசு பள்ளிகளில் படித்து சேர்ந்தவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கு திட்டமும் செயல்படுத்தப்படும். பிளஸ்2 துணைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் இன்ஜினியரிங் படிப்புகளில் சேருவதற்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதேபோல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வராண்டா அட்மிஷன் மூலம் சேர்ந்து கொள்ளலாம். கல்லூரிகளில் காலியிடங்கள் இருக்கும் பட்சத்தில் துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சேர்ந்து கொள்ள முடியும். இதில் மாற்று கருத்து இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: