ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பான விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்த தடை விதித்து நேற்று உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை கடந்த ஜூன் மாதம் விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, ‘அதிமுக பொதுக்குழுவை திட்டமிட்டபடி ஜூன் 11ம் தேதி நடத்தலாம். ஆனால், தீர்மானம் தொடர்பாக எந்தவொரு இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க இயலாது. மேலும் தீர்மானங்களை நிறைவேற்றவோ, புதிய தீர்மானங்களை கொண்டு வரவோ தடையில்லை என உத்தரவிட்டு பொதுக்குழுவுக்கு தடைக்கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தார்.

இதையடுத்து அதற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை நடத்தலாம். ஆனால் மனுதாரர் தரப்பில் வைக்கப்பட்டுள்ள 23 தீர்மானங்களை மட்டுமே ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். இருப்பினும் மற்ற புதிய தீர்மானங்கள் குறித்து ஆலோசித்தாலும் அதுகுறித்த எந்த முடிவையும் எடுக்கக் கூடாது என உத்தரவிட்டது. இதையடுத்து திட்டமிட்டபடி சென்னை வானகரத்தில் இருக்கும் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் கடந்த ஜூன் 23ம் தேதி அதிமுகவின் முதல் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் ஓபிஎஸ் மற்றும் ஈ.பி.எஸ் இருவரும் ஒரே மேடையில் அமர்ந்திருந்தனர்.

இதையடுத்து நடந்த நிகழ்ச்சியின் போது ஓபிஎஸ் தரப்பில் குறிப்பிடப்பட்ட 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாகவும், கட்சியின் நிரந்தர அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் நியமிக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆதரவர்களான கே.பி.முனுசாமி மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோர் பகிரங்கமாக அறிவித்தனர். இருப்பினும் அதிமுக கட்சியின் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர் கோரிக்கையான ஒன்றை தலைமை தீர்மானம் நிறைவேற்றப்படும் போது மேற்கண்ட நிராகரிக்கப்பட்ட 23 தீர்மானங்களும் நிறைவேற்றப்படும் எனவும் அவர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் தெரிவித்ததோடு, அடுத்த பொதுக்குழு கூட்டத்தை வரும் ஜூலை 11ம் தேதி காலை 9.15மணிக்கு நடைபெறும் என அறிவித்தனர். இதனால் கடும் கோபத்துக்குள்ளான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பொதுக்குழு கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினர்.

இதையடுத்து தற்போது வரையில் அதிமுகவில் யாருக்கு உச்சபட்ச அதிகாரம் உள்ளது என ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரிடையே போட்டி நீடித்து வருகின்றது. இதைத்தொடர்ந்து திட்டமிட்டபடி இரண்டாவது முறையாகவும் கடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து இரண்டாவது முறையாக நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு எதிராக ஓ.பன்னீா்செல்வம், பொதுக்குழு உறுப்பினா் வைரமுத்து ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் சென்னையில் கடந்த ஜூலை 11ம் நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது எனகடந்த ஆகஸ்ட் 17ம் தேதி தீா்ப்பளித்தார்.

இதையடுத்து தனி நீதிபதியின் தீா்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்தது. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக ஒ.பன்னீர்செல்வமும், அதே்போன்று அவரது ஆதரவாளரும் பொதுக்குழு உறுப்பினருமான பி.வைரமுத்து ஆகிய இருவர் தரப்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இதே விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து மேற்கண்ட மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் கிருஷ்ணா முராரி ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் ரஞ்சித் குமார் மற்றும் குருகிருஷ்ண குமார் ஆகியோர் வாதத்தில், ‘அ.தி.மு.க.வின் அனைத்து பதவிகளை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் மேற்கொள்ள முடியும். அதனால் அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டதே விதிமுறைகளுக்கு எதிரானது.

இதனை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு கருத்தில் கொள்ளவில்லை. மேலும் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படுவதற்கு 15 நாட்களுக்கு முன்னர் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நோட்டீஸ் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் அனைத்து முடிவுகளையும் எடப்பாடி பழனிசாமி தன்னிச்சையாக முடிவெடுத்து நடத்தியுள்ளது. அதனை எப்படி ஏற்க முடியும். இதில் உண்மையை கூற வேண்டுமானால் கடைசி வரை கட்சிக்கு தேவையான அனைத்தையும் ஓ.பன்னீர்செல்வம் செய்ய தயாராக இருந்தார். ஆனால், எடப்பாடி பழனிசாமி தரப்பு தான் அவரை வெளியில் தள்ளிவிட்டு முடிவுகளை ஒருதலைபட்சமாக எடுத்துள்ளது என தெரிவித்தார்.

இதையடுத்து அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், முதலில் இந்த மனு மீது ஈ.பி.எஸ் தரப்பு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து, விரிவாக விசாரணை நடத்தலாம் என தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட ஓ.பி.எஸ் தரப்பு வழக்கறிஞர்கள், ‘‘அப்படியென்றால் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால், இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன், ‘‘ பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் தங்களுக்கு ஆதரவளித்துள்ளனர். எனவே மனுதாரரான ஓ.பி.எஸ் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும் என தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து அதற்கு பதிலளித்த நீதிபதிகள், ‘‘சென்னை உயர் நீதிமன்றத்தில் நடக்கும் பிரதான வழக்கில் வரும் முடிவு இந்த நீதிமன்றத்தின் முடிவுக்கு உட்பட்டதாக இருக்கும்.ஆனால் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு என்பது கட்சி விவகாரம். அதனால், அதில் விதிகள் மீறப்பட்டுள்ளதா என்பதை தீர விசாரிக்க வேண்டியுள்ளது என தெரிவித்தனர். அப்போது, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த அனுமதிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு மீண்டும் பதிலளித்த நீதிபதிகள்,‘‘ நீங்கள் தானே அதிமுகவின் பொறுப்பாளராக தற்போது இருக்கிறீர்கள். எனவே, இப்போதே பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த என்ன அவசரம் வேண்டியுள்ளது.

வழக்கின் முடிவுக்கு பின்னர் நடத்த வேண்டியது தானே என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த எடப்பாடி தரப்பு வழக்கறிஞர், தற்போதைய நிலையில் இதுபோன்ற உத்தரவோ, கருத்தோ நீதிமன்றம் தெரிவிக்க வேண்டாம். இது 1.50 கோடி தொண்டர்களை கொண்ட இயக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,‘ அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் ஓ.பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கிற்கு எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பிக்கிறது. இதுதொடர்பான வழக்கை நவம்பர் மூன்றாவது வாரத்திற்கு ஒத்திவைக்கிறோம். அப்போது இதே பொதுக்குழு தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கு குறித்தும் விவாதிக்கப்படும். இருப்பினும் இந்த வழக்கில் விசாரணை முடிந்து ஒரு உத்தரவு பிறப்பிக்கும் வரையில் அதிமுக பொதுக்குழு தேர்தலை நடத்தக் கூடாது. அதனை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைக்கிறது என உத்தரவிட்டனர்.

அப்போது குறுக்கிட்ட எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர், ‘‘உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கு முடியும் வரை பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த மாட்டோம் என உறுதி அளிப்பதாக தெரிவித்தார். இதையடுத்து அதனையும் நீதிபதிகள் பதிவு செய்து கொண்டனர். அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலுக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் எடப்பாடி பழனிசாமிக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நீங்கள் தானே அதிமுகவின் பொறுப்பாளராக தற்போது இருக்கிறீர்கள். எனவே, இப்போதே பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த என்ன அவசரம் வேண்டியுள்ளது.

* சென்னையில் ஜூலை 11ல் நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது என ஆக.17ம் தேதி தீர்ப்பு.

* அதிமுக பொதுக்குழு தொடர்பாக தனி நீதிபதியின் தீர்ப்பை 2 நீதிபதிகள் அமர்வு செப்.5ம் தேதி ரத்து செய்தது.

Related Stories: