குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைப்பவர்களுக்கு சிறப்பு பரிசு; கல்வி கட்டணம் செலுத்தப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

சென்னை: குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைப்பவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படுவதோடு கல்வி கட்டணம் செலுத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறையின் சார்பாக சென்னை சைதாப்பேட்டையில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் கலந்துக்கொண்டு விழாவை தொடங்கி வைத்தனர்.

குழந்தை ஆரோகியமாக வளர தடுப்பூசி போடுதல், தகுந்த பரிசோதனைகள் செய்வதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட கர்ப்பிணி பெண்களுக்கு புடவை, வளையல், பூ, பழம், மஞ்சள், கண்ணாடி தட்டு அடங்கிய வரிசை தட்டுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைப்பதை பெருமையாக கருத வேண்டும் என தெரிவித்தார்.

அடுத்த 6 மாதத்தில் விழா ஒன்றை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், அதில் தமிழ் பெயர் வைத்தவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படுவதோடு, குழந்தைகளுக்கான கல்வி கட்டணமும் செலுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்திருக்கிறார். பின்னர் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், கர்ப்பிணிகள் ஒரு நாளைக்கு 5 முறை சாப்பிட வேண்டும். 1098 என்ற உதவி எண்கள் மூலம் பெண்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் புகார் அளிக்கலாம் என்று தெரிவித்தார். பெண்களுக்கு உளவியல் ரீதியிலான பிரச்சனை ஏற்பட்டாலும் இந்த தொலைபேசி எண்ணுக்கு அழைத்தால் ஆலோசனை வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

Related Stories: