காங். தலைவர் தேர்தலில் போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்: திருவனந்தபுரம் எம்.பி. சசிதரூர் பேட்டி

டெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாக திருவனந்தபுரம் எம்.பி. சசிதரூர் தெரிவித்துள்ளார். செய்தியர்களுக்கு பேட்டியளித்த சசிதரூர், நாங்கள் அனைவரும் ஒரே சித்தாந்தத்தை நம்புபவர்கள், கட்சி வலிமையடைய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுகிறேன் என தெரிவித்தார். 22 ஆண்டுகளுக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சி தலைவருக்கான தேர்தல் அக்டோபர் 17ம் தேதி நடைபெறவுள்ளது. 19ம் தேதி தேர்தல் முடிவு அறிவிக்கப்படவுள்ளது.

தலைவர் பதவிக்கு போட்டியிட போவதாக அறிவித்த ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், நேற்று சோனியாகாந்தியை சந்தித்த பிறகு, தான் போட்டியில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்தார். அவரை தொடர்ந்து சோனியா காந்தியை ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் சச்சின் பைலட் சந்தித்தார். கெலாட்டிற்கும், தமக்கும் இடையிலான மோதல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு மழுப்பலான பதில் அளித்துவிட்டு சச்சின் பைலட் கிளம்பினார்.

இதனிடையே இன்று ஜனநாயக முறைப்படி, வேட்புமனு தாக்கல் நடைபெறும் என்று ராகுலுடன் கூடலூருக்கு நடைபயணம் வந்திருந்த மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாக திருவனந்தபுரம் எம்.பி. சசிதரூர் தெரிவித்துள்ளார். மேலும் சிலர் வேட்பு மனுத்தாக்கல் செய்ய வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: