காதல் திருமணம் செய்த வாலிபர் கொலையில் மனைவி, மாமனாருக்கு ஆயுள் தண்டனை: மயிலாடுதுறை கோர்ட் தீர்ப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே காதல் திருமணம் செய்த வாலிபரை கொலை செய்த வழக்கில் மனைவி மற்றும் மாமனாருக்கு ஆயுள் தண்டனை விதித்து மயிலாடுதுறை நீதிமன்றம் உத்தரவிட்டது. மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் போலீஸ் சரகத்துக்குட்பட்ட அப்புராஜபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கலைமதி (30). இவரும், சதீஷ்குமார் (30) என்பவரும் காதலித்து கடந்த 2019ல் திருமணம் செய்து கொண்டனர். திருமணமான சில மாதங்களிலேயே கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கலைமதி தந்தை நாகராஜன் (60) வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில் 2019 மே 12ம் தேதி சதீஷ்குமார், மனைவியை அழைத்து வர மாமனார் நாகராஜன் வீட்டுக்கு சென்றார்.

அப்போது அங்கு அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. திடீரென நாகராஜன் கத்தியால் சதீஷ்குமாரை குத்தினார். கலைமதி செங்கல்லை எடுத்து கணவரை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த சதீஷ்குமார் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து பொறையார் போலீசார் வழக்குப்பதிந்து நாகராஜன், கலைமதி ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கை மயிலாடுதுறை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி இளங்கோ விசாரித்து  நாகராஜன், கலைமதி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

Related Stories: