விவாகரத்துக்கு பிறகு குழந்தையை காணவரும் கணவருக்கு டீ தர வேண்டும் என்ற உத்தரவு ரத்து: ஐகோர்ட்டின் இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு

சென்னை: விவாகரத்தான பிறகு குழந்தையை காண வரும் முன்னாள் கணவருக்கு தேநீர் கொடுத்து உபசரிக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. விவாகரத்து மூலம் பிரிந்த கணவன், மனைவிக்கு பிறந்த குழந்தையை சந்திக்க கோரி கணவர் தொடர்ந்த  வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, பிரிந்து வாழும் தம்பதியர், தங்களை கணவன்- மனைவியாக கருதாமல், விருந்தினர்களாக கருத வேண்டும். குழந்தையுடன் சேர்ந்து அவர்களும் உணவருந்த வேண்டும். குழந்தையை காண வரும் முன்னாள் கணவருக்கு தேநீர் வழங்கி உபசரிக்க வேண்டும்.

அரியானா மாநிலம் குருகிராமில் வேலை பார்க்கும் முன்னாள் மனைவியை சென்னையில் தங்கியிருந்த, கணவன் குழந்தையை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து முன்னாள் மனைவி தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குருகிராமில் பணியாற்றும் மனுதாரரால் சென்னைக்கு வர முடியாது. குழந்தையை காண உரிமை கோரிய வழக்கில், குழந்தையை காண வரும் முன்னாள் கணவரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தனி நீதிபதி போதனை செய்ய முடியாது என்று வாதிடப்பட்டது.

 இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், குழந்தையை காண வரும் முன்னாள் கணவருக்கு தேநீர் வழங்கி உபசரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை தனி நீதிபதி தனது அதிகார வரம்பை மீறி பிறப்பித்துள்ளார் எனக்கூறி மனுதாரர் கோரிக்கை ஏற்று தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும், குழந்தையை காண விரும்பினால் முன்னாள் கணவர், முன்கூட்டி தகவல் தெரிவித்து, குருகிராம் சென்று சந்திக்கலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories: