சனி, ஞாயிறு, ஆயுதபூஜை என தொடர் விடுமுறை: சென்னை டூ நெல்லைக்கு ரூ4000 கட்டணம் வசூல்

* ஆம்னி பஸ் கட்டணம் பல மடங்கு உயர்வு

* பயணிகள் கடும் அதிர்ச்சி

சென்னை: சனி, ஞாயிறு, ஆயுதபூஜை, விஜயதசமி என்று தொடர் விடுமுறை எதிரொலியாக ஆம்னி பஸ்களில் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு ரூ.4000 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டண உயர்வால் பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இன்று இந்தக் கட்டணம் மேலும் பல மடங்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மற்றும் கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் லட்சக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். இவர்கள் பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் மற்றும் கோயில் திருவிழாக்களுக்கு சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.

அதே நேரத்தில் தொடர் விடுமுறை வந்தால் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று குடும்பத்துடன் கொண்டாடுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நாளை சனிக்கிழமை, நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை வருகிறது. தொடர்ந்து செவ்வாய் கிழமை ஆயுதப்பூஜை, புதன் கிழமை விஜயதசமி என்று வருகிறது. திங்கட்கிழமை மட்டும் ஒரு நாள் விடுமுறை எடுத்தால், 5 நாட்கள் விடுமுறை ஆகிவிடும். 5 நாட்கள் விடுமுறை நாளில் எப்படியாவது சொந்த ஊரில் சொந்தபந்தங்களுடன் இருக்க வேண்டும் என்று ரயில்களில் முன்பதிவு தொடங்கியபோதே போட்டி போட்டு கொண்டு விண்ணப்பித்தனர். ஆனால், நிறைய பேர் காத்திருப்பு பட்டியலில் இருக்கும் நிலை இருந்து வருகிறது. ரயில்களில் இடம் கிடைக்காததால் கடைசியில் தனியார் பஸ்களை நாடினர்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டது. அதாவது வழக்கமான நாட்களில் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு ரூ.750 முதல் ரூ.900 வரை கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. இது இன்றைக்கு பயணம் செய்ய ரூ.4000 என்று வசூலிக்கப்பட்டுள்ளது. இதே போல் திருச்சிக்கு ரூ.800 வரை வசூலிக்கப்பட்டு வந்தது. இது ரூ.2300 வரையும், சென்னை டூ கோவைக்கு ரூ.1000 வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த கட்டணம் ரூ.3000 ஆகவும் அதிகரிக்கபட்டுள்ளதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதே போல பல்வேறு இடங்களுக்கான கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அதிரடி கட்டண உயர்வை பார்த்து பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

அதே நேரத்தில் கடைசி நேரத்தில் என்ன செய்வது? என்று தெரியாமல் கேட்ட கட்டணத்தை கொடுத்து சொந்த ஊர்களுக்கு செல்ல டிக்கெட் எடுத்துள்ளனர். இது போன்ற கட்டணத்தை உயர்த்தினால் சாதாரண மனிதர்கள் எப்படி பஸ்களில் பயணம் செய்ய முடியும் என்றும் அவர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இது போன்ற அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது போக்குவரத்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: