சென்னையில் விதிகளை மீறி கட்டப்பட்ட 2.75 லட்சம் வீடுகளுக்கு கூடுதல் சொத்து வரி: மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: சென்னையில் அனுமதி மீறி கட்டிய, 2.75 லட்சம் வீடுகளுக்கு கூடுதல்  சொத்து வரி விதிக்க மாநகராட்சி முடிவு செய்து மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மேயர் பிரியா தலைமை வகித்தார். துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் ககன்தீப் சிங்பேடி முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம்,  புதுமைப் பெண் திட்டம் ஆகியவற்றை கொண்டு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மேயர் பிரியா நன்றி தெரிவித்தார். தொடர்ந்து, கேள்வி நேரத்தில் கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி பேசினர். அதை நிவர்த்தி செய்வது குறித்து மேயர் பிரியா பதில் அளித்தார்.

மன்ற கூட்டத்தில் 97 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கிய தீர்மானங்கள் வருமாறு:

* சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சொத்து வரி மறு  சீராய்வு செய்யப்பட்டது. 12.5 லட்சம் சொத்துவரி உரிமையாளர்கள் உள்ளனர். அதில் 6.90 லட்சம் பேர் முதல் அரையாண்டு சொத்துவரி முழுமையாக செலுத்தி உள்ளனர். மீதம் உள்ள 6.25 லட்சம் உரிமையாளர்கள் சொத்து வரி செலுத்த வேண்டும். நடப்பு நிதியாண்டில் 2ம் அரையாண்டு தொடங்க குறுகிய காலமே உள்ளதால் முதல் அரையாண்டு வரியினை செலுத்தாத சொத்து உரிமையாளர்களுக்கு 2 சதவீதம் தனிவட்டி விதிக்கப்பட்டுள்ளது.

* இந்தியாவிலேயே முதன்முறையாக, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கட்டிடங்களை கணக்கிடுவதற்கு டிரோன் தொழில்நுட்பம் மூலம் ஆய்வு செய்யும் முறை பயன்படுத்தப்பட்டது. இதன் மூலம் அனைத்து சொத்துகளும், அதாவது குடியிருப்பு வீடுகள், வணிக வளாகங்கள் கணக்கெடுக்கப்பட்டது. இதற்கான வரைப்படத்தை தயாரிப்பதற்கு செயற்கைகோள் படங்கள் மற்றும் டிரோன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில், 3,10,139 எண்ணிக்கையிலான கட்டிடங்கள் கண்டறியப்பட்டு மாநகராட்சிக்கு அறிக்கையாக  சமர்ப்பிக்கப்பட்டது. இதில் 30,897 மாறுபாடுள்ள கட்டிடங்கள் வருவாய் துறை  மூலம் அளவீடு செய்து பணிகள் முடிக்கப்பட்டது. மீதமுள்ள 2,79,240 மாறுபாடுள்ள கட்டிடங்கள் நிவர்த்தி செய்ய வேண்டியது.

* தற்போதைய சூழலில் மாநகராட்சி வரி மதிப்பீட்டாளர்கள் மூலம் இந்த பணிகளை மேற்கொண்டால் காலதாமதம் ஆகும். எனவே தனியார் நிறுவனங்கள் மூலம் துல்லியமாக ஆய்வு செய்து பணியை மேற்கொள்ள ரூ.5.94 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களை கொண்டு இந்த பணியை மேற்கொள்ளும்போது மாநகராட்சிக்கு தோராயமாக ஒரு அரையாண்டிற்கு ரூ.95.95 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என உத்தேசிக்கப்பட்டுள்ளது.

* கெல்லீஸ் செம்மண்பேட்டை மற்றும் அமைந்தகரை கலெக்ரேட் காலனி ஆகிய இரண்டு இடங்களில் பழுதடைந்த நிலையில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் காப்பகத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

* சென்னை பள்ளி மாணவ, மாணவிகள் பல்வேறு போட்டி தேர்வுகளில் பங்கேற்று சிறந்த தொழில் சார்ந்த உயர் கல்லூரிகளில் சேர்ந்து பயில்வதற்காக சிறப்பு பயிற்சி அளிக்கும் வகையில் மாதிரி பள்ளிகள் உருவாக்கப்படும். அப்பள்ளிகளில் உட்கட்டமைப்பை மேம்படுத்தவும், கற்றல், கற்பித்தல் பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதற்காக நுங்கம்பாக்கம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாதிரி பள்ளியாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

* மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் மண்டலம்-5ல் வார்டு 55ல் அப்பு தெருவில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம் கட்டுவதற்கு ரூ.1,60,31,681 மதிப்பீட்டிற்கு திருத்திய நிர்வாக அனுமதி வழங்கப்படுகிறது. ஓட்டேரி கால்வாயின் குறுக்கே ஆஸ்பிரன் கார்டன் 2வது தெரு மற்றும் கீழ்ப்பாக்கம் தோட்டம் தெருவை இணைக்கும் இடத்தில் அமைந்துள்ள பாலத்தை இடித்துவிட்டு புதிதாக பாலம் கட்ட அனுமதி வழங்கப்படுகிறது.    

* கொளத்தூர் பிரதான சாலையில் மேம்பாலம் கட்டும்பணிக்கு இடையூறாக இருந்த 53 வீடுகள் அகற்றப்பட்டது. அந்த குடும்பங்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் வீடுகள் ஒதுக்க வேண்டுகோள் விடுத்திருந்தனர். அதன் அடிப்படையில் பயனாளிகளின் பங்கீட்டு தொகையான ரூ.2.60 கோடியை சென்னை மாநகராட்சி செலுத்தும்.

* பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி மரணம் ஏற்பட்டால் அதற்கான இழப்பீடு தொகை ரூ.10 லட்சம் என்று உச்ச நீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்டது. தற்போதுள்ள விலை உயர்வினை அடிப்படையாக கொண்டு இதை உயர்த்துவது குறித்து தமிழக அரசு ஆலோசித்து முடிவு செய்துள்ளது. அதன்படி, கடந்த ஜூன் 7ம்தேதி முதல் இந்த தொகையை ரூ.15 லட்சமாக அதிகரிக்கலாம் என்றும், ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் ரூ.1.50 லட்சம் கூடுதலாக வழங்க முடிவு செய்துள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சியிலும் இந்த நடைமுறைகளை பின்பற்ற அனுமதி வழங்கப்படுகிறது.

*சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாய நல மையங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 107 டாக்டர்களின் பணி ஒப்பந்த காலம் மேலும் 11 மாதங்கள் நீட்டிக்க அனுமதி அளித்தல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

* அபராத தொகை அதிகரிப்பு

சென்னை மாநகராட்சியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.1,550 அபராதம் விதிக்கப்படுகிறது. 2021 ஜூலை 7ம் தேதி முதல் 2022 ஜூன் 3ம் தேதி வரை 4,099 மாடுகள் பிடிக்கப்பட்டு 61 லட்சத்து 63 ஆயிரத்து 750 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மாடுகளின் உரிமையாளர்களை அழைத்து மண்டல அளவில் கூட்டம் நடத்தியும் மாடுகள் சாலையில் திரிவது குறையாமல் உள்ளது. இதனை தடுக்கும் விதமாக அபராத தொகையை இருமடங்காக உயர்த்தி நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

* அபராதம் தளர்வு

சொத்து வரி சீராய்வு தொடர்பான வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாலும், உயர்த்தப்பட்ட சொத்து வரியை இன்று (30ம்தேதி)க்குள் செலுத்த வேண்டி உள்ளதாலும் உரிமையாளர்களுக்கு போதிய கால  அவகாசம் வழங்கிடும் வகையில் அபராதமாக விதிக்கப்பட்ட 2 சதவீதம் தனிவட்டி தளர்வு செய்வது அவசியமாக கருதப்படுகிறது. அதன்படி முதல் அரையாண்டு சொத்துவரி செலுத்தாத உரிமையாளர்களுக்கு மட்டும்  ஒருமுறை சிறப்பு நிகழ்வாக 2 சதவீதம் தனி வட்டியிலிருந்து தளர்வு செய்ய அனுமதிக்கலாம்.

Related Stories: