‘இன்டிகோயோவாபேரி’ இனத்தை சார்ந்த தாவரத்திலிருந்து மனித செல்களில் உள்ள நச்சு வெளியேற்றும் மருந்துக்கான மூலப்பொருள் கண்டுபிடிப்பு: வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக மாணவி அசத்தல்

திருவலம்: வேலூர் திருவள்ளுவர் பல்கலைகழக விலங்கியல்துறை ஆராய்ச்சி மாணவி ‘இன்டிகோயோவாபேரி’ இனத்தை சார்ந்த தாவரத்திலிருந்து மனித செல்களில் உள்ள நச்சு வெளியேற்றும் மருந்துக்கான மூலப்பொருளை கண்டுபிடித்துள்ளார். மேலும் மூலப்பொருளை பிரித்தெடுக்கவும், செயற்கையாக உருவாக்க முடியுமா என்பது குறித்தும் ஆய்வில் ஈடுபட்டு வருகிறார். வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா திருவலம் அடுத்த சேர்க்காட்டில் இயங்கி வரும் வேலூர் திருவள்ளுவர் பல்கலைகழகத்தின் கட்டுப்பாட்டில் வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் 70க்கும் மேற்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகிறது.

இப்பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் பி.எச்டி, மற்றும் பல்வேறு ஆராய்ச்சி படிப்புகளில் மாணவ, மாணவிகள் பயின்று பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்து வருகின்றனர். மேலும், ஆராய்ச்சி படிப்புகளில் மாணவ, மாணவிகள் சிறந்த வழிமுறையில் பயிலவும் ஆராய்ச்சிகளில் வெற்றி பெறவும் பல்கலைக்கழகத்தில் பல்வேறு கருத்தரங்குகள், பயிலரங்குகள் நடத்தப்பட்டு வருகிறது.  இந்நிலையில், பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறையில் ஆராய்ச்சி படிப்பில் பயின்று வரும் மாணவி ராஜேந்திரன் பிரியங்கா, விலங்கியல்துறை தலைவர் மு.சந்திரன் வழிகாட்டுதலின்படி கடந்த 2 ஆண்டுகளாக தாவரங்களை கொண்டு பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

அதன்படி, மனிதர்களுக்கு ஏற்படும் அல்சர், நாள்பட்ட காயம், தோல், சொரி, சிரங்கு, நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் போன்றவைகளை தடுக்கும் மருந்திற்கான மூலப்பொருளை ‘இன்டிகோயோவாபேரி’ இனத்தை சார்ந்த தாவரத்தில் இருப்பதை மாணவி ராஜேந்திரன் பிரியங்கா ஆய்வில் உறுதி செய்துள்ளார். இந்த தாவரத்தில் இருந்து பெறப்படும் மூலக்கூறானது மனித உடலில் உள்ள அனைத்து வகையான நச்சுகளையும், குறிப்பாக செல்களில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் தன்மையுடையது.

இந்த வேதிப்பொருள் மூலக்கூறு அமைப்பை கண்டறியும் பொருட்டு, அவற்றை செயற்கையாக தயார் செய்ய முடியுமா என்றும், வேறு ஏதேனும் பயன்களை அளிக்குமா என பல்வேறு ஆராய்ச்சியில் மாணவி ஈடுபட்டு வருகிறார். விரைவில் இம்மூலக்கூற்றினை பிரித்தெடுக்கும் வழிமுறைக்கும், இம்மூலக்கூறுக்கும் காப்புரிமையை பெறுவதற்கும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த தாவரம் ஒரு சில இடங்களில் மட்டுமே காணக்கூடிய ஒரு நறுமணமிக்க தாவரமாகும். மேலும், பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளரும் விலங்கியல்துறை தலைவருமான மு.சந்திரன் மேற்பார்வையில் இந்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: