வேளாண்மையில் சிறப்பாகச் செயலாற்றும் விவசாயிகளுக்குப் பரிசு அறிவிப்பு: விவசாயிகள் முன்பதிவு செய்ய அழைப்பு விடுப்பு

சென்னை: பயிர்களின் உயர்மகசூல் பெறுவதற்கு, வேளாண்மையில் நவீன உத்திகளை புகுத்தி, விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் நோக்கத்தில், தமிழ்நாடு அரசு பல்வேறு புதிய திட்டங்களை உள்ளடக்கி, 2021-2022 ஆம் ஆண்டில் தனது முதலாவது வேளாண்மை நிதிநிலை அறிக்கையினை தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது.

இயற்கை வேளாண்மை, விளைபொருள் ஏற்றுமதி, வேளாண்மையில் புதிய உள்ளூர் கண்டுபிடிப்பு ஆகிய மூன்று இனங்களில் சிறந்து விளங்கும் விவசாயிகளை அரசு ஊக்குவித்து பாராட்டி பரிசளிக்கும் திட்டத்தினை 2021-2022 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தி, ஆறு இலட்சம் ரூபாய் நிதியினை ஒப்பளித்தது.

நடப்பாண்டிலும் இத்திட்டத்தினை செயல்படுத்தி, மேற்காணும் மூன்று இனங்களில் சிறந்து விளங்கும் விவசாயிகளை தொடர்ந்து ஊக்குவித்து, பாராட்டி பரிசளிக்கும்  என வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் 2022-2023 ஆம் ஆண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.   

போட்டி மற்றும் பரிசுத் தொகை பற்றிய விபரம்;

1.வேளாண்மைத்துறை மூலமாக, மாநில அளவில், உள்ளூர் புதிய விவசாய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிப்பதில் சிறந்து விளங்கும் ஒரு விவசாயிக்கு ஒரு இலட்சம் ரூபாய் ரொக்கப்பரிசும், வேளாண் பணிகளை எளிதாக்கும் வகையில், இயந்திரத்தை புதியதாகக் கண்டுபிடிக்கும் ஒரு விவசாயிக்கு ஒரு இலட்சம் ரூபாய் ரொக்கப்பரிசும் வழங்கப்படும்.  

2.தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலமாக, மாநில அளவில் இயற்கை முறையில் தோட்டக்கலைப் பயிர் சாகுபடி செய்வதில் சிறந்து விளங்கும் முதல் மூன்று விவசாயிகளுக்கு முதல் பரிசாக ஒரு இலட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 60,000 ரூபாயும்,  மூன்றாம் பரிசாக 40,000 ரூபாயும்,  ரொக்கப் பரிசாக வழங்கப்படும்.  

3.வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலமாக, மாநில அளவில் விளைபொருள் ஏற்றுமதியில் சிறப்பாகச் செயலாற்றும் ஒரு விவசாயிக்கு, இரண்டு இலட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

சிறந்து விளங்கும் விவசாயிகளை தேர்ந்தெடுப்பது எவ்வாறு?

மேற்காணும் மூன்று இனங்களில் தகுதியான விவசாயிகளைத் தேர்வு செய்வதற்காக மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையிலும், மாநில அளவில் வேளாண்மைத்துறை இயக்குநர், தோட்டக்கலைத் துறை இயக்குநர், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பாக, தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியத்தின் தலைமைச் செயல் அலுவலர் தலைமையிலும், தேர்வுக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

போட்டியில் கலந்து கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும்?

1.போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் விவசாயிகள், உழவன் செயலி மூலமாகத் தங்களது பெயர்களை பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தினை முறையாகப் பூர்த்தி செய்து சமர்ப்பித்திட வேண்டும்.

2.குத்தகை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகளும்  இப்போட்டியில் கலந்து கொள்ளலாம்.

3.இப்போட்டிக்கான நுழைவுக்கட்டணமாக நூறு ரூபாயை சம்மந்தப்பட்ட வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் செலுத்தி  படிவத்துடன் இணைத்திட வேண்டும்.  

4.பதிவு செய்தபின், உங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநரையோ அல்லது தோட்டக்கலை உதவி இயக்குநரையோ அல்லது வேளாண்மைப் பொறியியல் உதவி செயற்பொறியாளரையோ அல்லது வேளாண் வணிகத்துறையின் வேளாண்மை துணை இயக்குநரையோ தொடர்பு கொள்ளலாம்.

5.கடந்த ஆண்டில் இப்போட்டியில்  கலந்து கொண்டு பரிசு பெறாத விவசாயிகள், தங்களது உள்ளூர் புதிய வேளாண் தொழில் நுட்பம் அல்லது புதிய இயந்திரம் ஆகியவற்றை மேம்படுத்தி நடப்பு ஆண்டிலும் பங்கேற்கலாம்.

எனவே, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள இந்தப் போட்டியில் கலந்து கொள்வதன் மூலம், நவீனத் தொழில்நுட்பங்களை பின்பற்றி உயர்மகசூல் பெறுவதில் உங்களைப் போன்றே மற்ற விவசாயிகளுக்கும் ஆர்வம் அதிகம் ஏற்படும் என்பதால், வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகள் இப்போட்டியில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Related Stories: