பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு ஒன்றிய அரசு தடை எதிரொலி; சென்னை உட்பட தமிழகம் முழுவதும் அதிவிரைவு படை வீரர்கள் உட்பட 20 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு: புரசைவாக்கத்தில் உள்ள தலைமை அலுவலகம் முன்பு தடுப்புகள் அமைத்து தீவிர கண்காணிப்பு

சென்னை: பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு ஒன்றிய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. இதையடுத்து அசம்பாவித சம்பவம் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், புரசவைாக்கத்தில் உள்ள அந்த அமைப்பின் தலைமை அலுவலகம் சுற்றிலும் தடுப்புகள் அமைத்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அளித்த அறிக்கையின்படி, நாடு முழுவதும் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பு மற்றும் இதன் கிளை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து ஒன்றிய அரசு இன்று உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து தமிழகத்தில் எந்த வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் தமிழக உளவுத்துறை அளித்த தகவலின்படி காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவுப்படி சென்னை, மதுரை, கடலூர், கோவை, கன்னியாகுமரி, திண்டுக்கல் உட்பட தமிழகம் முழுவதும் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகள் மற்றும் பிரச்னைக்குரிய இடங்களை தேர்வு செய்து  அந்த பகுதிகளில் அதிவிரைவுப்படை வீரர்கள் உட்பட 20 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  

சென்னையை பொறுத்தவரை புரசைவாக்கத்தில் உள்ள தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியை சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் உள்ள பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பின் தேசிய தலைவர்கள், மாநில தலைவர்கள், மற்றும் நிர்வாகிகள் வீடுகள், அலுவலகங்கள், அதேபோன்று இந்த அமைப்பின் கிளை அமைப்புகளின் அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகளிலும்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி துப்பாக்கி ஏந்திய போலீஸ் உட்பட 5 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், பிரச்னைக்குரிய இடங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி வரும் நபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: