நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் முழுமையாக நிரம்பாத கரடிப்பட்டியூர் ஏரி-2 ஆயிரம் ஏக்கர் பாசன நிலம் பாதிப்பு

அந்தியூர் : அந்தியூர் அருகே சுற்றுவட்டாரத்தில் கனமழை பெய்தாலும், குறிப்பாக நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் முழுமையாக நிரம்பாமல் கரடிப்பட்டியூர் ஏரி காட்சியளிக்கிறது. இதனால் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பு விவசாய நிலங்களின் பாசனம் கடுமையாக பாதித்துள்ளது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் கெட்டி சமுத்திரம் ஏரி, ராசாங்குளம் ஏரி, எண்ணமங்கலம் ஏரி, பெரிய ஏரி, பூனாட்சி, முகாசிபுதூர் உள்ளிட்ட ஏரிகள் நிறைந்து உபரி நீர் வெளியேறி வருகிறது. குருவரெட்டியூர், சென்னம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து பாலமலை பகுதியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் அருகில் உள்ள ஏரிகளை மளமளவென நிரப்பியது.

சுற்றுவட்டாரத்தில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத மழை இந்த வருடம் கொட்டி தீர்த்தது. இருப்பினும், குருவரெட்டியூர் அருகே உள்ள கண்ணாமூச்சி நீர்ப்பிடிப்பு பகுதியில் போதிய மழை பெய்யவில்லை. இதனால், கரடிப்பட்டியூர் ஏரி நிரம்பவில்லை. கண்ணாமூச்சி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையே கரடிப்பட்டியூர் ஏரியை நிரப்பும் என்பதால் இந்நிலை நிலவுகிறது. இந்த ஏரிக்கு சுற்றுவட்டாரத்தில் குருவரெட்டியூர், தொப்பம்பாளையம், கோனார்பாளையம், கனவனூர், ஏலூர், ரெட்டியபாளையம், குரும்பபாளையம், புரவிபாளையம், சனிச்சந்தை ஆகிய கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் சின்ன வெங்காயம், நிலக்கடலை, மக்காசோளம், பருத்தி, வாழை, எள், கம்பு உள்ளிட்டவை பயிரிடப்படுகின்றன. இந்த கரடிப்பட்டியூர் ஏரி மட்டும் முழுமையாக நிரம்பாததால், இந்த ஏரியை நம்பி விவசாயிகள் தங்களது விளைநிலத்தில் பயிர்களை விளைவிக்க முடியாத நிலை நிலவுகிறது.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில்,கரடிப்பட்டியூர் ஏரி மொத்தம் 50 ஏக்கர் பரப்பு உடையது. 1995ம் ஆண்டு அதன் முழு கொள்ளளவை எட்டி முழுமையாக நிரம்பியது. இதற்கு பின்னர், மற்ற ஏரிகள் நிரம்பினாலும் கரடிப்பட்டியூர் ஏரி  மட்டும் இதுவரை நிரம்பியதே இல்லை. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பொதுப்பணி துறையினர், ரூ.2 கோடியே 20 லட்சம் மதிப்பில் ஏரிக்கரையை பலப்படுத்தி தூர்வாரினர். இருந்த போதும் இந்த ஏரி நிரம்பவே இல்லை.

குருவரெட்டியூர் வட்டார விவசாயிகள் நீரேற்று பாசன சங்கம் மூலம் அம்மாபேட்டை அருகே காவிரி ஆற்றில் இருந்து பைப் லைன் மூலம் தங்களது நிலங்களுக்கு தண்ணீர் எடுத்து வருகின்றனர். இந்த ஏரியை நிரப்பினால் குருவரெட்டியூர், தண்ணீர் பந்தல் பாளையம், கண்ண பள்ளி கிராமம், வெள்ளி திருப்பூர் கிராமம் ஆகிய பகுதிகளில் உள்ள 2 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், சுற்றுவட்டார கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து ஆயிரக்கணக்கான மக்களின் குடிநீர் தேவைகளும் பூர்த்தி செய்யும் என்றனர்.

கரடிப்பட்டியூர் ஏரியின் நீர்ப்பிடிப்பு அருகாமை பகுதியில் கடந்த 10 நாளுக்கு முன்பு கனமழை பெய்தாலும் ஏரிக்கு குறைந்த அளவு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து ஏரியும் நிரம்பிய நிலையில் இந்த ஏரியில் குறைந்த அளவு நீர்மட்டமே உள்ளது. இதனால் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். இதையடுத்து, சுற்றுவட்டாரத்தில் உள்ள பிற ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரி நீரை கரடிப்பட்டியூர் ஏரிக்கு கொண்டு வர வாய்க்கால்களை வெட்ட வேண்டும்.

தற்போது சீரழிந்து அடைப்பு ஏற்பட்டுள்ள இரு ஏரிகளுக்கு இடையிலான நீர்வழிப்பாதைகளில் அடர்ந்துள்ள புதர்களை அகற்றி சீர்படுத்த வேண்டும். மேலும், அம்மாபேட்டை காவிரி ஆற்றில் இருந்து ராட்சத குழாய்களை பதித்து சுற்றுவட்டார ஏரிகளை விவசாயிகளே தங்களது சொந்த செலவில் நிரப்பி வருகின்றனர். அதேபோல, கரடிப்பட்டியூர் ஏரியையும் நிரப்ப அதிகாரிகள், விவசாயிகள் சங்கத்தினர் இணைந்து முன்வர வேண்டும். இதன்மூலம் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பு பாசன வசதி சாத்தியமாகும். அப்போதுதான் விவசாயம் செழித்து வாழ்வாதாரம் சிறப்படையும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: