சிதம்பரம் நடராஜர் கோயிலில் நகைகள் எவ்வளவு?: 19வது நாளாக அதிகாரிகள் நகை சரிபார்ப்பு பணி..!!

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் 19வது நாளாக நகை சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நகை சரிபார்ப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்து சமய அறநிலையத்துறை கடலூர் மாவட்ட துணை ஆணையர் ஜோதி தலைமையில் 6 பேர் குழு ஆய்வு செய்து வருகிறது. சிதம்பரத்தில் உள்ள உலக புகழ்பெற்ற நடராஜர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சில நேரங்களில் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் நகைகளை கோவிலுக்கு காணிக்கையாக செலுத்துகின்றனர். அவ்வாறு பக்தர்களால் வழங்கப்பட்ட நகைகள் முதன் முதலாக கடந்த 1955ம் ஆண்டு மதிப்பீடு செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து பல்வேறு கால கட்டங்களில் கோவிலில் நகைகள் சரிபார்ப்பு பணி நடைபெற்றது. தற்போது சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஏராளமான தங்கம், வெள்ளி நகைகள் உள்ளன. சிதம்பரம் கோயிலில் உள்ள நகைகள் அனைத்தும் 2005ம் ஆண்டுக்கு முன்னர் கடைசியாக ஆய்வு செய்யப்பட்டது. அதன் பிறகு கோயிலுக்கு வந்த புதிய நகைகள் எதுவும் ஆய்வு செய்யப்படவில்லை. 2005 முதல் 2022 ஜனவரி வரை கோயிலுக்கு கிடைத்த நகைகள் 19வது நாளாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. நகைகளை சரிபார்க்கும் பணி சில நாட்களில் நிறைவு பெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: