பிஎப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளை சட்டவிரோத அமைப்புகளாக அறிவித்து ஒன்றிய உள்துறை அமைச்சகம்

டெல்லி: பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அது தொடர்புடைய இயக்கங்களுக்கு 5 ஆண்டு தடை விதித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தின் மீதான தடை உடனடியாக அமலுக்கு வருகிறது.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி அளித்ததாகவும், பயங்கரவாத செயலுக்கு பயிற்சி மற்றும் ஆட்கள் சேர்த்தல் உள்பட பல்வேறு புகார்கள் எழுந்தது. இது, தொடர்பாக 15 மாநிலங்களில் 93 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறை கடந்த 22-ம் தேதி அதிரடி சோதனை நடத்தியது.

இந்த சோதனையில் 106 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சோதனைக்கு கண்டனம் தெரிவித்து நடந்த போராட்டத்தில் பல இடங்களில் கல்வீச்சு, வன்முறை சம்பவங்களும் அரங்கேறியது. குறிப்பாக, தமிழ்நாடு, கேரளாவில் பெட்ரோல் வீச்சு சம்பவங்களும் அரங்கேறியது.

இதனை தொடர்ந்து, உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், கர்நாடகா, அசாம், டெல்லி, குஜராத், மராட்டியம், தெலுங்கானா ஆகிய 8 மாநிலங்களில் பிஎப்ஐ தொடர்புடைய இடங்களில் நேற்று 2-வது முறையாக சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின் போதும் பலர் கைது செய்யப்பட்டனர். இந்த 2 சோதனைகளின் போதும் பல்வேறு சர்ச்சைக்குரிய ஆவணங்கள், பணம், டிஜிட்டல் கருவிகள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக இதுவரை மொத்தம் 247 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கும் இந்தியாவில் 5 ஆண்டுகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிஎப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளை சட்டவிரோத அமைப்புகளாக அறிவித்த ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.

Related Stories: