‘நான் காதலிக்கவில்லை... அவர் காதலித்தார்...’ துணை நடிகை தற்கொலை செய்த வழக்கில் தயாரிப்பாளரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை: முரண்பட்ட பதிலால் போலீசார் திணறல்

சென்னை: சென்னையில் நடிகை தற்கொலை செய்துகொண்ட வழக்கில், தயாரிப்பாளரும் இயக்குனருமான சிராஜூதீன் முரண்பட்ட தகவலை தெரிவித்து வருகிறார். இதனால், அவரிடம் கிடுக்கிபிடி விசாரணை நடந்து வருகிறது.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ஜெசிக்கா பவுலின் (எ) தீபா (29). இவர், சென்னை விருகம்பாக்கத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவர், இயக்குனர் மகிவர்மன் இயக்கத்தில் இந்தாண்டு வெளியான வாய்தா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில், திருமணமான இயக்குனரும் தயாரிப்பாளருமான சிராஜுதீன் என்பவரை பவுலின் காதலித்து வந்தார்.

இவர். கடந்த 17ம் தேதி நடிகை தனது வீட்டில் கடிதம் எழுதிவைத்து தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நடிகையின் காதலன் என்று கூறப்படும் தயாரிப்பாளரும் இயக்குனருமான சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த சிராஜூதீனிடம் போலீசார் நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர். சுமார் 100க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்டனர். மேலும் அவரின் பதிலை எழுத்துப்பூர்வமாக போலீசார் பதிவு செய்தனர்.

குறிப்பாக, நடிகையை தனக்கு கடந்த 5 மாதமாகத்தான் தெரியும் என்றும், தான் அவரை காதலிக்கவில்லை. ஆனால் அவர் தன்னை ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்தார் என்றும் இயக்குனர் தெரிவித்துள்ளார். நடிகைக்கு கை, கால்களில் தோல் தொடர்பான பிரச்னை இருந்ததாகவும், அவரது தோழி பல் மருத்துவர் நித்தியா என்பவர் மூலமாக தனியார் மருத்துவமனையில் அதற்கு அவர் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், மன உளைச்சலுக்கு பவுலின் தள்ளப்பட்டதாகவும் இதற்காக டாக்டர்களிடம் ஆலோசனை பெற்று வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

நடிகையை காதலிக்கவில்லை என்றால் ஏன் ஐபோன் வாங்கி கொடுத்தீர்கள் என்ற கேள்விக்கு, ‘நான் ஐபோன் வாங்கி கொடுக்கவில்லை. அது ஜெசிக்காவின் ஐபோன் தான் என்று தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். பிரபாகரன் மூலமாக ஐபோனை எடுத்து வரசொன்னது ஏன் என்று கேட்டதற்கு, அவர் மழுப்பலாக பதில் அளித்துள்ளார். ஆனால், பிரபாகரன் இருவரும் காதலித்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதற்கிடையே, நடிகை வழக்கு சம்பந்தமாக தயாரிப்பாளரும் இயக்குனருமான சிராஜூதீன் தொடர்ந்து முரண்பட்ட தகவல்களை தெரிவித்து வருவதால் உண்மையை கண்டுபிடிக்க போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: