ராணிப்பேட்டையில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் பள்ளிகளில் குழந்தை திருமணம் தடுப்பு விழிப்புணர்வு-கலெக்டர் அறிவுறுத்தல்

ராணிப்பேட்டை : பள்ளிகளில் குழந்தை திருமணம் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அறிவுறுத்தினார்.ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நேற்று நடந்தது. இதில், மாவட்டம் முழுவதும் பள்ளிகள், பொது இடங்களில் குழந்தை திருமணம் தடுப்பு, போக்சோ சட்டம், சட்ட விரோதமாக குழந்தைகள் தத்தெடுப்பு ஆகியன குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்.  இந்த நிகழ்வுகளில் ஒருங்கிணைப்பு துறைகளான காவல் துறை, சுகாதாரத்துறை, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு துறை, சைல்டு லைன் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட துறை ஆகிய துறைகள் இணைந்து செயல்பட வேண்டுமென மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தெரிவித்தார்.

இக்குழு அமைக்கப்பட்ட பிறகு நேற்று நடந்த முதல் கூட்டத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசியதாவது:பெண்களுக்கு 18 வயதிற்கு கீழ் திருமணம் செய்வதால் ஏற்படும் உடல் பிரச்னைகள், உயிர் ஆபத்துகள், சிறுவயதில் கர்ப்பமாவதால் ஏற்படும் வாழ்நாள் உடல் பிரச்னைகளை பள்ளிகளில் தெரிவிக்க வேண்டும். நாள்தோறும் நடைபெறும் நிகழ்வுகளை தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்து ஒளிவு மறைவற்ற கலந்துரையாடலை செய்ய வேண்டுகோள் விடுக்க வேண்டும்.

குழந்தை திருமணங்கள் அதிகம் நடைபெறும் பகுதிகளை கண்டறிந்து, அதிக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், சட்டத்தை மீறி திருமணம் செய்யும்போது அதற்குண்டான தண்டனைகள் குறித்து தெரிவிக்க வேண்டும். மேலும், பள்ளிகளில் போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கவுன்சிலிங் தேவைப்படும் மாணவ, மாணவிகளுக்கு முறையாக கவுன்சிலிங் கொடுக்க வேண்டும்.

மேலும், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் குழந்தைகளை கண்டறிந்து பாதுகாக்க வேண்டும். சாலைகளில் சுற்றித்திரியும், பிச்சை எடுக்கும் குழந்தைகளை தடுத்து அவர்களை பாதுகாக்க வேண்டும். மேலும், போதை பொருள்கள் பள்ளி குழந்தைகளுக்கு விநியோகம் செய்வதை தடுத்திட காவல்துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும். கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு மற்றும் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடத்த வேண்டும். சைல்டு லைன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை அனைத்து பள்ளிகளிலும் இடம் பெற செய்ய வேண்டும். குழந்தைகள் தத்து எடுத்தல் பற்றி மருத்துவ பணியாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இந்த சமூகத்தின் நாளைய எதிர்காலமான பள்ளி குழந்தைகள் நல்ல வழியில் செல்ல தேவையான அனைத்து முயற்சிகளையும் வழங்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் ஒருங்கிணைந்த துறைகள் இணைந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பதாகைகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டார்.

இதில், நீதித்துறை நடுவர் நவீன்துரைபாபு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராதாகண்ணன், துணை காவல் கண்காணிப்பாளர் பிரபு, துணை இயக்குனர் சுகாதாரம் மரு.மணிமாறன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வசந்தி ஆனந்தன், நல குழும தலைவர் வேதநாயகம், இளைஞர் நீதி குழுமம் ராஜ்குமார், நன்னடத்தை அலுவலர் ஏகாம்பரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: