பெரம்பூரில் ஷட்டரை திறக்க முடியாததால் நகைக்கடை கேமராவை மட்டும் திருடிச்சென்ற கொள்ளையர்கள்

பெரம்பூர்: பெரம்பூரில் நகைக்கடை பூட்டை உடைத்து ஷட்டரை கடப்பாரையால் அடித்து உடைத்து திறக்க முடியாததால் வெளியிலிருந்த சிசிடிவி கேமராக்களை மட்டும் திருடி சென்ற கொள்ளையர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொடுங்கையூர் வெங்கடேஸ்வரா காலனி பகுதியைச் சேர்ந்தவர் தயாநிதி (24). இவர், பெரம்பூர் பட்டியல் சாலையில் சொந்தமாக நகைக்கடை நடத்தி வருகிறார். 24ந் தேதி இரவு வழக்கம்போல கடையை மூடிவிட்டு சென்றுவிட்டார். மறுநாள் காலை மீண்டும் கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு ஷட்டர்கள் இரும்பு ராடால் நீக்கப்பட்டு இருந்தன. அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா இரண்டு காணாமல் போய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து, உடனடியாக செம்பியம் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நகைக்கடையை திறக்கச் சொல்லி ஆய்வு செய்தபோது உள்ளே இருந்த நகைகள் அனைத்தும் பத்திரமாக இருந்தது. ஷட்டரின் பூட்டை உடைத்த நபர்கள் ஷட்டர் லாக் இருந்ததால் அதை திறக்க முடியாமல் கட்டப்பாரையை வைத்து திறக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அதுவும் பயன் தராததால் ஏமாற்றம் அடைந்த அவர்கள் அருகில் இருந்த இரண்டு சிசிடிவி கேமராக்களையும் தாங்கள் மாட்டிக் கொள்ளக் கூடாது என்ற எண்ணத்தில் எடுத்து சென்று விட்டனர்.

இருப்பினும் இவர்கள் கடைக்கு வருவது முதல் பூட்டை உடைப்பது, ஷட்டரை கட்டப்பாரையால் உடைப்பது என அனைத்தும் சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்தது. சிசிடிவி கேமராவை திருடிவிட்டால் நாம் மாட்டிக் கொள்ள மாட்டோம் என்ற ரீதியில் அவர்கள் சிசிடிவி கேமராக்களை மட்டும் எடுத்துச் சென்றுள்ளனர். சிசிடிவியில் பதிவு ஆகும் அனைத்தும் டிவிஆரிலும் பதிவாகும் என்பதை அவர்கள் உணரவில்லை. எனவே சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து மூன்று பேரையும் செம்பியம் போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: