கலைக் களஞ்சியமாக திகழும் வகுப்பறைகள் நூற்றாண்டு கடந்து கம்பீரமாய் நடைபோடும் தொடக்கப்பள்ளி: மாணவர்களுக்கு திருப்புமுனை தரும் திருப்புட்குழி, அரசு பணிகளில் ஜொலிக்கும் முன்னாள் மாணவர்கள்

சென்னை: மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனின் கற்றோன் சிறப்புடையன் என்கிறது மூதுரை. அதாவது கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு, மன்னற்குத் தன்தேசம் அல்லால் சிறப்பு இல்லை என்று கற்றோரின் மேன்மையை மூதுரை இவ்வாறு எடுத்துரைக்கிறது. அத்தகைய மாசற மாணவர்களுக்கு கற்பித்தல் பணியை செவ்வனே செய்து வரும் அரசுப் பள்ளியாக காஞ்சிபுரத்தை அடுத்த திருப்புட்குழியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 5ம் வகுப்புவரை உள்ள இந்த அரசு ஆரம்பப் பள்ளி சுதந்திரத்திற்கு முன்பே 1908ம் ஆண்டு தொடங்கப்பட்டு நூற்றாண்டை கடந்து கம்பீரமாய் வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் தற்போது  சுமார் 500 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். ஒரு தலைமை ஆசிரியர் உள்பட 10 ஆசிரியர்கள் உள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாதிரிப் பள்ளியாக செயல்படும் இப்பள்ளியில் கடந்த 6 ஆண்டுகளுக்கு  முன்பு சுமார் 200 ஆக  இருந்த மாணவர்களின் எண்ணிக்கை தற்போது சுமார் 500ஐ எட்டியுள்ளது. இப்பள்ளியில் திருப்புட்குழி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் மாணவர்கள் வந்து படிக்கின்றனர். அதிக அளவில் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளே முன்னெடுக்காத பல விஷயங்களை இப்பள்ளியில் நடத்திக் காட்டியுள்ளனர். காலையில் தொடங்கும் இறைவணக்கம் நிகழ்ச்சியில் சுழற்சி முறையில் 4 மற்றும் 5ம் வகுப்பு மாணவர்கள் திருக்குறள் வாசித்து அதற்கு பொருள் விளக்கம் சொல்கின்றனர். மேலும் அன்றைய நாளில் பிறந்த நாள் காணும் மாணவர்களுக்கு அனைத்து வகுப்பு மாணவர்களும் இணைந்து அந்த மாணாக்கருக்கு பிறந்த நாள் வாழ்த்துப் பாடல் பாடி வாழ்த்து சொல்கின்றனர்.

இதனை தொடர்ந்து வகுப்பறைக்குள் செல்லும் மாணவர்களுக்கு வகுப்பறை ஒரு கலைக் களஞ்சியமாகவே திகழ்கிறது. இந்த பள்ளியில் அனைத்து வகுப்புகளும் ஸ்மார்ட் வகுப்பறைகளாகவே செயல்படுகின்றன. குறிப்பாக, 4 மற்றும் 5ம் வகுப்புகளில் மாணவர்கள் 5 பேர் கொண்ட குழுவாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கென்று தனியாக கணினியில் வீடியோ வடிவில் பாடம் கற்பிக்கப்படுகிறது. மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகளை பெற்றோரின் மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ் ஆப் மூலம் தெரியப்படுத்தும் முறை போன்றவை பெற்றோர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

கல்வித்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்பும், அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படும் ஆசிரியர்களுமே இப்பள்ளியின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என்று தெரிவிக்கும் பள்ளி தலைமை ஆசிரியர் குமார், ஆசிரியர்கள் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக மாணவர்களின் பிறந்த நாளுக்கு பரிசளித்தல், தேர்வில் அதிக மதிப்பெண் வாங்கும் மாணவருக்கு பரிசளித்தல் என்று ஆசிரியர்கள் தங்கள் சொந்த செலவில் செய்யும் பல்வேறு செயல்பாடுகளால் தொடர்ந்து இந்த பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது என்று பெருமிதமாக கூறுகிறார்.

நூற்றாண்டை கடந்த இந்த பள்ளியில் படித்த மாணவர்களில் பலர் அரசுப் பணிகளிலும், பத்திர பதிவுத் துறை அதிகாரி உள்ளிட்ட உயர் பதவிகள், அரசியல் ஆளுமைகள் என பல்வேறு துறைகளில் ஜொலித்து வருகின்றனர்.இந்நிலையில், கடந்த ஆறு ஆண்டுகளாக பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் இந்த ஆண்டு பள்ளியில் சேர்க்கை குறைந்திருக்கிறது.

* விருதுகள்

இப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் செல்வகுமார் 2017ல்்  ஒன்றிய அரசு சார்பில் வழங்கப்படும் தேசிய தகவல் தொழில்நுட்ப நல்லாசிரியர் விருதையும், 2018ம் ஆண்டு மாநில அரசு சார்பில் வழங்கப்படும் கனவு ஆசிரியர் விருதையும் பெற்றுள்ளார். 2018ம் ஆண்டு புதுமைப் பள்ளி விருது, 2019ம் ஆண்டு மாநில அரசு சார்பில் வழங்கப்படும் நல்லாசிரியர் விருதை பள்ளி தலைமை ஆசிரியர் குமாரும் பெற்றுள்ளனர்.

* அமைச்சர் பாராட்டு

இந்த பள்ளிக்கு சில மாதங்களுக்கு முன்பு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி வருகை தந்து மாணவர்களிடம் உரையாடினார். பின்னர், இந்தப் பள்ளி சிறப்பாக முன்மாதிரி பள்ளியாக செயல்படுவதற்கு வாழ்த்து தெரிவித்ததுடன், இந்த பள்ளிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்துகொடுக்கும் என்று தெரிவித்தார்.

Related Stories: