ஆபாச படம் வெளியிடுவதாக பணம் கேட்டு நடிகைக்கு மிரட்டல்

சென்னை,: ‘அறிந்தும் அறியாமலும்’, ‘555’, ‘தில்லாலங்கடி’ உள்பட பல படங்களில் நடித்தவர், லட்சுமி வாசுதேவன். பல டி.வி தொடர்களிலும் நடித்துள்ளார். அவர் தன்னை சிலர் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், கொடுக்காவிட்டால் தனது ஆபாச படங்களை வெளியிடுவதாக அந்த சிலர் கூறுவதாகவும் கண்ணீர் மல்க புகார் கூறியுள்ளார். இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கண்ணீர் மல்க கூறியிருப்பதாவது: கடந்த 11ம் தேதி 5 லட்ச ரூபாய் பரிசு விழுந்திருப்பதாக சொல்லி, என் செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதனுடன் வந்த லிங்க்கை தொட்டவுடன் ‘ஆப்’ பதிவிறக்கம் ஆனது. அதிலிருந்து என் மொபைல் ஹேக் செய்யப்பட்டது. பிறகு 3 நாட்கள் கழித்து மர்ம நபர்கள் எனக்கு போன் செய்து, ‘நீங்கள் 5 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளீர்கள். அதை திரும்ப செலுத்துங்கள்’ என்று சொன்னார்கள்.

அதை நான் சீரியசாகவே எடுத்துக்கொள்ளவில்லை. பிறகு வெவ்வேறு நம்பரில் இருந்து தொடர்ந்து மிரட்டல் போன் மற்றும் மெசேஜ் வந்ததால், இதுபற்றி ஐதராபாத் கிரைம் பிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்தேன். என் போனை ஹேக் செய்து எல்லா நம்பர்களையும் எடுத்துக்கொண்டு, என் போட்டோவை ஆபாசமாக மார்பிங் செய்து எனது நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். என் பெற்றோருக்கும் எனது ஆபாச போட்டோவை அனுப்பியுள்ளனர். நான் எப்படிப்பட்டவள் என்பது என்னுடன் பழகி யவர்களுக்கு தெரியும். தப்பான ‘ஆப்’ ஒன்றில் சென்று, இன்றைக்கு ஒரு இக்கட்டான மனநிலையில் தவிக்கிறேன். தயவு செய்து லோன் ‘ஆப்’ உள்பட தேவையில்லாத எதையும் டவுன்லோடு செய்யாதீர்கள்.

Related Stories: