‘கிணத்தை காணோம்’ வடிவேல் பட காமெடி மாதிரி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை தேடும் நெட்டிசன்கள்: ஜெ.பி.நட்டா பேசியதை கலாய்க்கும் தலைவர்கள், இணையதளங்களில் வறுபடும் பாஜவினர்

சென்னை: ‘கிணத்தை காணோம்’ என்ற வடிவேல் பட காமெடி மாதிரி பாஜ தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவின் பேச்சால், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விமர்சனதுக்கு உள்ளாகி, தற்போது இணையத்தில் விவாத பொருளாக மாறியுள்ளது. இதில், பாஜவினரை நெட்டிசன்கள் கேலி கிண்டல் செய்து வறுத்தெடுத்து வருவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றிய அரசு கடந்த 2015ம் ஆண்டில் தமிழகத்திற்கான எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தோப்பூரில் அமையும் என அறிவித்தது. அதை தொடர்ந்து, 2019ல் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அடிக்கல் நாட்டப்பட்டு சுமார் 3 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும், சாலை மற்றும் சுற்றுச்சுவரை தவிர வேறு எந்தவொரு கட்டுமான பணிகளும் நடக்கவில்லை.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணி ‘இப்போது முடிந்துவிடும் அப்போது வந்துவிடும்’ என பாஜ தலைவர்கள் பேசி வருவது அப்பகுதி மக்களை கடுப்பாக்கி உள்ளது. இந்தச் சூழலில் தான், இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பாஜவின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா மதுரை எய்ம்ஸ் குறித்து கூறியுள்ள கருத்துகள் விவாதத்தைக் கிளப்பி உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் ஜெ.பி.நட்டா சுற்றுப் பயணத்தின்போது, பல துறை வல்லுநர்களுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், ‘‘மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு முதற்கட்டமாக ரூ.1,264 கோடி ஒதுக்கப்பட்டது. எய்ம்ஸ் எங்கு அமைக்கலாம் என்று சிக்கல் எழுந்த நிலையில், மதுரையில் கட்ட முடிவு செய்தோம். அதற்கான தொகை ஒதுக்கப்பட்ட நிலையில், இன்று எய்ம்ஸ் மருத்துவமனையின் 95 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

ஆனால், பாஜ தேசிய தலைவர் நட்டா குறிப்பிட்டபடி, எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தில் சுற்றுச்சுவரை தவிர எந்தவித கட்டுமான பணிகளும் நடைபெறவில்லை. மேலும், அந்த இடம் பொட்டல் காடாக காட்சி அளித்து வரும் நிலையில் பாஜ தேசிய தலைவர் இப்படி பேசியது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.  அவரது பேச்சு இணையத்தில் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. பலரும் எய்ம்ஸ் கட்டுமானம் குறித்து இணையத்தில் பாஜ தலைவரின் கருத்துகளை பதிவிட்டு வறுத்தெடுத்து வருகின்றனர். அதற்கு, பாஜவினர் பதில் சொல்ல முடியாமல் திணறி வருவதும் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை கெட்டியாக பிடித்துக் கொண்ட தமிழக அரசியல் தலைவர்கள் ஜெ.பி.நட்டாவையும், பாஜவையும் சமூக வலைதளங்களில் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர். மதுரை கம்யூனிஸ்ட் எம்பி சு.வெங்கடேசனும், விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூரும், எய்ம்ஸ் அமைய உள்ள மதுரை தோப்பூர் பகுதிக்கு சென்று 95 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டதாக கூறப்படும் எய்ம்ஸ் எங்கே என கேள்வி எழுப்பி பதாகைகள் ஏந்தி நின்றனர்.

அதுமட்டுமல்லாமல் நடிகர் வடிவேலுவின் கிணற்றை காணோம் என்ற நகைச்சுவை காட்சி பாணியில் மதுரையில் 95 சதவீதம் கட்டப்பட்டதாக கூறப்படும் எய்ம்ஸை காணோம் என பேட்டி கொடுத்தனர். இதுவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜெ.பி.நட்டாவின் பேச்சை பார்த்த பலரும், மதுரை எய்ம்ஸ் தொடர்பாக நக்கலாக தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். வடிவேலு நடித்திருந்த படம் ஒன்றில் அவர் கிணத்தை காணோம் என்று போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்து இருப்பார். இதை அத்துடன் ஒப்பிட்டு 95 சதவீத பணிகள் நிறைவடைந்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை காணவில்லை எனக் கிண்டல் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள். மேலும், இன்னும் சிலர் பிரபு- கவுண்டமணி நடித்த திரைப்படத்தின் காட்சி ஒன்றைப் பகிர்ந்து வருகின்றனர். அதில் பிரபுவை வீட்டிற்கு கவுண்டமணி அழைத்துச் செல்வார்.

வீட்டின் முகப்பு மட்டும் பக்காவாக இருக்கும். ஆனால் உள்ளே எதுவும் இருக்காது. இது தான் புதிய மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எனப் பகிர்ந்து வருகின்றனர். சிலர் வடிவேலுவின் பிரபல மீம் ஒன்றையும் பகிர்ந்து வருகின்றனர். அதில் ‘ஒரே ஒரு செங்கல் தான் நட்டாங்க.. 95 சதவீத பணிகள் குளோஸ்’ என்று கருத்து பதிவிட்டு வருகின்றனர். இப்படி ஜெ.பி.நட்டாவின் பேச்சு சமூக வலைதளங்களில் கேலி கிண்டலுக்கு ஆளாகிய நிலையில், அதற்கு ஜெ.பி.நட்டா விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘‘மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான ஆரம்பக்கட்ட பணிகள் தான் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளது என்று கூறினேன். அதை தவறாக புரிந்து கொண்டுள்ளனர்’’ என்று கூறியுள்ளார். கட்டுமான பணிகள் எதுவும் தொடங்காத நிலையில் பாஜ தலைவர் இப்படி பேசியிருப்பது பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை மட்டுமல்ல அப்பகுதி மக்களையும் கொந்தளிக்க செய்துள்ளது. அவரது பேச்சை கண்டித்து பல அமைப்பை சேர்ந்தவர்கள் அந்த பகுதியில் போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், ஜெ.பி.நட்டாவின் பேச்சை திரித்து விட்டதாக தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையும், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகனும் கூறி அப்பகுதி மக்களை திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில், ஜெ.பி.நட்டா பேசிய ஒரிஜினல் பேச்சு என்ற வீடியோவை பாஜவினர் பதிவிட்டு வருகின்றனர். ஆனால் அந்த பேச்சானது ஜெ.பி.நட்டா விளக்கம் அளிக்கும்போது பேசிய பேச்சு என்பதை கண்டுபிடித்த நெட்டிசன்கள், முதலில் பேசிய பேச்சையும், விளக்கம் அளிக்கும்போது பேசிய புதிய பேச்சையும் இணைத்து வெளியிட்டுள்ளனர். இது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. கிணத்தை காணோம் என்ற காமெடி ரேஞ்சுக்கு ஒன்றிய பாஜ அரசு அறிவித்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருப்பது பாஜவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே வடமாநிலங்களில் பாஜ தலைவர்கள் ஏதாவது ஒன்றை பேசி பொதுமக்கள் மத்தியில் குட்டு வாங்கி வரும் நிலையில், தமிழகத்தில் ஒரு தேசிய தலைவரே இப்படி ஒரு பொய்யான தகவலை சொல்லியிருப்பது தமிழக அரசியலில் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

*காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ப.சிதம்பரம் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணியில் 95 சதவீதம் பூர்த்தியாகிவிட்டது என்று சொன்னதோடு பாஜ தலைவர் நட்டா ஏன் நிறுத்திக் கொண்டார். பூர்த்தியான பகுதியில் டாக்டர்கள் நாள்தோறும் 1000 புறநோயாளிகளைக் கவனிக்கிறார்கள் என்று சொல்லியிருக்கலாமே. பூர்த்தியான இன்னொரு பகுதியில் அறுவை சிகிச்சை அரங்கம் செயல்பட்டு அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன என்று சொல்லியிருக்கலாமே. பூர்த்தியான இன்னொரு பகுதியில் மருந்தகம் செயல்பட்டு தோயாளிகளுக்கு மருந்துகள் வழங்கப்படுகின்றன என்று சொல்லியிருக்கலாமே’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: