ஐதராபாத்தில் இன்று கடைசி டி.20 போட்டி; தொடரை வென்று புதிய சாதனை படைக்குமா இந்தியா?: மல்லுக்கட்டும் உலக சாம்பியன் ஆஸி.

ஐதராபாத்: இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையே 3 போட்டி கொண்ட டி.20 தொடரில் முதல் போட்யில் ஆஸி,யும், 2வது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்ற நிலையில் 3வது மற்றும் கடைசி டி.20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு ஐதராபாத் ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் நடக்கிறது. முதல் போட்டியில் மோசமான பவுலிங்கால் தோல்வியை சந்தித்த இந்தியா 2வது போட்டியில் வென்றது புதிய ஊக்கத்தை அளித்துள்ளது. பேட்டிங் வலுவாக உள்ள நிலையில் பந்துவீச்சு தான் சொதப்பலாக தொடர்கிறது. அக்சர் பட்டேல் அசத்தும் நிலையில், சாஹல் எடுபடவில்லை. இதேபோல் வேகத்தில் ஹர்சல்பட்டேல், புவனேஸ்வர்குமாரும் ரன்களை வாரி வழங்குகின்றனர். காயத்தில் இருந்து திரும்பி உள்ள பும்ரா நம்பிக்கை அளிக்கிறார். இன்றைய போட்டியில் சாஹலுக்கு பதிலாக அஸ்வின் களம் இறங்குவார் என தெரிகிறது.

ஆஸ்திரேலிய அணியில் மேத்யூ வேட், ஆரோன் பிஞ்ச், கேமரூன் கிரீன் பேட்டிங்கில் மிரட்டுகின்றனர். பவுலிங்கில் ஆடம் ஜாம்பா நெருக்கடி அளித்து வருகிறார். வேகத்தில் ஹேசில்வுட், கம்மின்ஸ் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இரு அணிகளும் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் களம் இறங்குவதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய அணி இந்த ஆண்டில் இதுவரை 20 டி.20 போட்டிகளில் வென்றுள்ளது. இதன்மூலம் ஒரு ஆண்டில் அதிக டி.20 போட்டிகளில் வெற்றி பெற்ற அணி என்ற பாகிஸ்தானின் சாதனையை சமன் செய்துள்ளது. இன்றைய போட்டிகளில் இந்தியா வெற்றி பெறும் பட்சத்தில் ஒரு ஆண்டில் அதிக டி.20 போட்டிகளில் வென்ற அணி என்ற புதிய சாதனையை படைக்கும். இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இதுவரை 25 முறை டி.20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 14 போட்டியில் இந்தியாவும், 10ல ஆஸி.யும் வென்றுள்ளன. ஒரு போட்டி கைவிடபப்பட்டுள்ளது. இன்று 26வது முறையாக சந்திக்கின்றன.

மைதானம் எப்படி? ஐதராபாத் பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக உள்ளது. இங்கு இதுவரை 2 சர்வதேச டி. 20 போட்டிகள் நடந்துள்ளன. இதில் 2019ல் வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வென்றுள்ளது. இதில் இந்தியா 208 ரன்னை சேசிங் செய்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதில் கோஹ்லி நாட்அவுட்டாக 94 ரன், கேஎல்ராகுல் 62 ரன் எடுத்தனர். இந்த ஆட்டத்தின் போது 27 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டது. 2017ல் ஆஸி.க்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டது. இன்று ஆட்டம் தொடங்கும் முன் மாலையில் மழை வரவாய்ப்பு உள்ளது. ஆனால் மாலை 6 மணிக்கு பின் மழைக்கு வாய்ப்பு இல்லை. வெப்பநிலை 27 டிகிரியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மழைபெரிய அளவில் குறுக்கிட வாய்ப்பு இல்லை.

ஹர்ஷலுக்கு பிசிசிஐ கெடு: ஹர்ஷல் பட்டேல் இன்றைய போட்டியில் மேத்யூ வேடிற்கு எதிராக சிறப்பாக பந்துவீசியே ஆக வேண்டும். குறிப்பாக அவரது விக்கெட்டை எடுத்துக் கொடுக்க வேண்டும். இந்த இரண்டையும் செய்யவில்லை என்றால், அடுத்து தென்னாப்பிரிக்க தொடரின்போது இடம் கிடைக்காது என பிசிசிஐ ஓபனாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இன்று ஹர்ஷல் பட்டேல், மேத்யூ வேட் இடையிலான போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: